டீன்-ஏஜ் பிரிவினருக்கு:
மினி பட்ஜெட் போட பழக்குங்கள்!
'அவனுக்கு என்ன தெரியும்? சின்னக் குழந்தை. அவன் படிப்புல கவனமா இருந்து நல்ல மார்க் வாங்கினாலே போதும்’ என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். கல்வி முக்கியம்; அதைவிட முக்கியம், வாழ்க்கைக் கல்வி என்கிற பண நிர்வாகம். இதற்கு ஒரு சின்ன ப்ராஜெக்டாக ஒரு மினி பட்ஜெட் போட பழக்குங்கள். திருப்பதி, பழநி ட்ரிப் அல்லது பர்த்டே பார்ட்டி போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கான செலவுக்கு உங்கள் டீனேஜ் மகன்/மகளை உட்கார வைத்துப் பட்ஜெட் போடுங்கள். என்னென்ன தலைப்புகள், எந்தெந்த விஷயங்களுக்குச் செலவு செய்யவேண்டும் என்று நோட்டில் எழுதச் சொல்லுங்கள். நோட்டில் எழுதி வைத்தால்தான் மனதில் பதியும். வெறும் மனக்கணக்கு போடுவது தப்புக் கணக்காகவே முடியும். பின்னர் எங்கெங்கே அசல் செலவு பட்ஜெட்டைத் தாண்டும் என்று கணிக்கச் சொல்லுங்கள்.
அந்தப் பயணம் முழுவதும் பிள்ளையின் கையில் நோட்டு இருந்து உடனுக்குடன் எழுதிக்கொண்டே வந்தால் நல்லது. எல்லாம் முடிந்தபின் ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டை குடும்பமாக அமர்ந்து அலசுங்கள். எங்கே செலவு அதிகமானது, ஏன் என்று அலசினால் அடுத்தமுறை இன்னும் கச்சிதமாகப் பட்ஜெட் போட முடியும்.
இதனால் என்ன லாபம்? பிற்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செலவு செய்யப் பழகுவார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தினால் ஒவ்வொரு இலக்காக விரைவில் அடையலாம். திடீர் பணவரவு வந்தால் தாம்தூம் என்று செலவழிக்க மாட்டார்கள்.
ஆய்வு செய்யப் பழக்குங்கள்!
டீன்- ஏஜ் மகன்/மகள் ரொம்ப நாளாக மொபைல் போன் வேண்டுமென்று நச்சரிக்கிறார்களா? என்ன மாடல் போன், எந்த நெட்வொர்க், என்ன ஸ்கீம், என்ன ஆஃபர் என்று விசாரித்து வரச் சொல்லுங்கள். அதைக் கச்சிதமாகச் செய்கிறார்களா என்பதைப் பாருங்கள்.
கோச்சிங் க்ளாஸில் சேரவேண்டுமா? அடிப்படை தகவல்களைத் திரட்டிவரப் பழக்குங்கள். கட்டணம் எவ்வளவு, ஆசிரியர்கள் தேர்ந்த பயிற்சியாளர்களா, வகுப்பறை எப்படி, லைட்டிங்க், பாத்ரூம் வசதிகள் எப்படி என்று விசாரிக்கச் சொல்லுங்கள்.
ஸ்போர்ட்ஸ் ஷூ வேண்டுமா? எங்கே டிஸ்கவுன்ட் சேல்? கம்ப்யூட்டர் வாங்கவேண்டுமா? என்ன மாடல், என்ன கான்ஃபிகரேஷன், என்ன விலை என்று கேட்கச் சொல்லுங்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வது என்பது ஏதோ கம்பச் சூத்திரமல்ல; அது பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்வதுதான் ரிசர்ச். பணம் செலவு செய்யப்போகிறோம் என்றால் நாலு விஷயமும் விசாரிக்கவேண்டும்.
இதனால் என்ன லாபம்? ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்த்து, தகவல் திரட்டி, தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பிற்காலத்தில் வீடு, கார், முதலீடு என்று எதையும் ஒன்றுக்கு பத்து தடவை அலசி ஆராய்ந்து வாங்குவார்கள். 'என்னாலே எல்லாம் நாலு கடை ஏறி இறங்க முடியாது. முதல் கடையிலேயே பர்ச்சேஸை முடிச்சிருவேன்' என்று சொல்லமாட்டார்கள். அடுத்தவர், கார் வாங்கினால் தானும் உடனே அதே மாடல் கார் வாங்கி வாசலில் நிறுத்துவேன் என்று வெட்டி பந்தா பண்ணாமல், நம் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ற மாதிரி வாங்குவார்கள்.
குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்!
நீங்கள் இந்தக் காலத்துப் பெற்றோர்தானே? பண நிர்வாகம் பற்றி உங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருவீர்கள்தானே!