« Reply #11 on: August 13, 2014, 02:19:10 PM »
முடிமாற்று அறுவைசிகிச்சை
முடிகொட்டுவதைத் தடுக்க, முடி அடர்த்தி அதிகரிக்க சில சிகிச்சைகள் உள்ளன. வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு முடி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த காஸ்மெடிக் ஆலோசகரும், அறுவைசிகிச்சை நிபுணருமான ஜெயந்தி ரவிந்திரன் கூறுகையில், ''முடி எதனால் கொட்டுகிறது எனக் கண்டறிந்து முதலில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முடி கொட்டுவதற்கு மரபியல், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இதைக் கண்டறிந்து சரிப்படுத்துவதன் மூலம் முடிக் கொட்டுதலைத் தடுக்க முடியும்.


ஏற்கெனவே வழுக்கை விழுந்தவர்களுக்கு மீண்டும் முடி முளைக்கவைக்க முடியாது. முடி கொட்ட ஆரம்பித்தவர்களுக்கு சில ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். அந்த மாத்திரைகள் போடும் வரை முடி கொட்டாது. மாத்திரை போடுவதை நிறுத்தியவுடன் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். ஏனெனில், முடி கொட்டும் நிகழ்வை மாத்திரை தள்ளிப்போடுமே தவிர, தடுத்து நிறுத்தாது.
வழுக்கைத் தலை உள்ளவர்களுக்கு பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள நிரந்தர முடி வேர்களை எடுத்து தலையின் முன் பக்கத்தில் நடுவோம். இப்படி சில அமர்வுகளின் மூலம் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் முடி வேர்கள் நடப்படும். நடப்பட்ட மூன்று வாரங்களில் முடி முளைக்க ஆரம்பித்துவிடும். இந்த மூன்று வார காலத்துக்குள் நோய்த் தொற்று, அரிப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டால் நடப்பட்ட முடி உதிர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. இந்த சிகிச்சை முறையில் சில சாதகம் மற்றும் பாதகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக சிகிச்சை தேவைப்படுபவருக்கு தெளிவுபடுத்திவிட்டு, அவரது முழு சம்மதத்துடன் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும். இதுதவிர ஸ்டெம் செல் சிகிச்சை உள்ளது. ஆனால் ஸ்டெம்செல் சிகிச்சைக்கு இதுவரை அங்கீகாரம் இல்லை'' என்றார் விளக்கமாக.


« Last Edit: August 13, 2014, 02:21:15 PM by MysteRy »

Logged