காதலானது தனிமையினை
முதன்மைபடுத்துகிறதா?
அல்லது
தனிமையானது காதலினை
முன் நிறுத்துகிறதா?
மென்மையானது பெண்மையுடன்
பிண்ணிப் பினைந்துள்ளதா?
அல்லது
பெண்மையானது மென்மையினை
ஈன்றெடுக்கின்றதா?
பலமானது பலவீனத்தை
தனிமைபடுத்துகிறதா?
அல்லது
பலவீனமானது பலத்தினை
அடையாளப்படுத்துகிறதா?
இரவானது பகலிற்கு
எழிலுட்டுகிறதா ??
அல்லது
பகலானது இரவினை
பயங்கரப்படுத்துகிறதா?
ஒலியானது நிசப்தத்தினை
மறைத்திடுகிறதா?
அல்லது
நிசப்தமானது ஒலியினை
ஓங்கச் செய்கிறதா??
நிறமானது வெறுமையினை
வேற்றுமைபடுத்துகிறதா?
அல்லது
வெறுமையானது
நிறங்களை கண்டுணரச் செய்கிறதா?
மொழியானது உரிமைக்கு
குரல் கொடுக்கிறதா?
அல்லது
உரிமையானது மொழிக்கு
வழி செய்கிறதா?
நாவ(வி)சைக்கும் மொழிதனை
அச்சாய் கொண்டு
இங்கு
மாந்தரினை வகை பிரித்தல்
தர்மமாகுமா?
ஒன்றது மற்றதை
ஓம்பித் திளைக்கயிலே
இது சரியென்றும்
அது தவறென்றும்
கூறலாகுமோ?
மக்களவர் சேர்ந்திங்கு
தேசம் நீளூமா?
அல்லது
மாக்களவர் சூதினிலே
மாய்ந்து போகுமா?
இயல்பான இவையனைத்தும்
அதன்படி இருக்க,
இது சரியென்றும் தவறென்றும்
பார்க்கலாகுமோ??
கோணல் மனம் பொருந்த உணர்வதெல்லாம்
மாயையாகுதே!
இது புரியும் முன்,
தேய்ந்தழிந்த முகிலினமாய்
காலம் விரையுதே..
சிந்தை கொண்டு அறிவதெல்லாம்
சிறந்திருக்கவே,
மந்தை மாந்தர் அதைவிடுத்து
மாய்ந்தழிவதேன்..??