Author Topic: ~ தேங்காயுடன் தயாராகும் உணவுகள் - ~  (Read 941 times)

Offline MysteRy

தேங்காயுடன் தயாராகும் உணவுகள் -

சமையல் செய்யும் போது உணவின் சுவையை அதிகரிக்கவும், வித்தியாசப்படுத்தவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் தேங்காய். இத்தகைய தேங்காயைக் கொண்டு பல்வேறு சுவையான நறுமணமிக்க ரெசிபிக்களை செய்யலாம். பொதுவாக தேங்காயை தென்னிந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.

அதிலும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் மீன், மட்டன் மற்றும் முட்டை ரெசிபிக்களின் சுவையை ருசித்தால், இன்னும் சூப்பராக இருக்கும். அப்படி தேங்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய சில ஈஸியான அதே சமயம் மிகவும் சுவையாக இருக்கும் ரெசிபிக்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அவற்றில் பிடித்ததை முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் நண்பன் தமிழ் அரட்டையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.




1. தேங்காய் தால் ரெசிபி



பருப்புக்களை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் தான், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பருப்பு ரெசிபியில் ஒன்றான தேங்காய், மைசூர் பருப்பு மற்றும் பீர்க்கங்காய் கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான தால் ரெசிபி தான், இந்த தேங்காய் தால் ரெசிபி.

தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 225 கிராம், கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கியது), பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது), இஞ்சி - 1 இன்ச் (தட்டியது), சீரகப் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் பால் - 400 மி.லி, வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி, தக்காளி - 4, பீர்க்கங்காய் - 1, (துண்டுகளாக்கப்பட்டது), கொத்தமல்லி - 3, டேபிள் ஸ்பூன் (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு

செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை குறைவில் வைத்து வெங்காயம், கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். * பின் ஒரு பௌலில் மைசூர் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி, வெங்காயம் வதங்கும் வரை ஊற வைக்க வேண்டும். * பிறகு வாணலியில் இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பின்பு ஊற வைத்துள்ள பருப்பை நன்கு கழுவி வாணலியில் போட்டு, தேங்காய் பால், வெஜிடேபிள் ஸ்டாக் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும். * அதற்குள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பின் தக்காளியை அதில் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி, குளிர்ச்சியான நீரில் அலசி, தக்காளியின் தோலை நீக்கி விட்டு, லேசாக மசித்து, பின் அதனை பருப்பு வெந்ததும் வாணலியில் போட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். * பின் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். * காயானது நன்கு வெந்துவிட்டால், வாணலியில் உள்ள பருப்பு மற்றும் காய் நன்கு மசிந்து கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது சுவைப் பார்த்து வேண்டுமானால் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி கொத்தமல்லியை தூவினால், சுவையான தேங்காய் தால் ரெசிபி ரெடி!

Offline MysteRy

2. தேங்காய் மட்டன் குழம்பு



தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு சுவையான மற்றும் எளிமையான மட்டன் ரெசிபி தான் தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பு. இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம், தேங்காய் - 1/2 கப் (துருவியது), வெங்காயம் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சோம்பு - 1, டீஸ்பூன் பட்டை - 1, பச்சை ஏலக்காய் - 2, கிராம்பு - 3, கறிவேப்பிலை - சிறிது, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 2 கப், கொத்தமல்லி - சிறிது

செய்முறை: முதலில் மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனைப் போட்டு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து மற்றொரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை நீருடன் ஊற்றி, வேண்டுமெனில் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையான தேங்காய் மட்டன் குழம்பு ரெடி!!!

Offline MysteRy

3. முட்டை தேங்காய் மசாலா



எப்போதும் முட்டையை ஆம்லெட் அல்லது வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அதனை வேக வைத்து, தேங்காய் அரைத்து ஊற்றி மசாலா செய்து, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: முட்டை - 4 (வேக வைத்தது), தேங்காய் விழுது - 1/2 கப், வெங்காயம் - 1 (அரைத்தது), தக்காளி - 1 (அரைத்தது), பூண்டு - 4-5 (லேசாக தட்டியது), பச்சை மிளகாய் - 3, மல்லி தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச், கிராம்பு - 1, பிரியாணி இலை - 1, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளற வேண்டும். பிறகு மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து, உப்பு போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை தேங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Offline MysteRy

4. தேங்காய் சாதம்



சில உணவுகளில் பல மூலிகைகள் பயன்படுத்துவதால், அந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த ஸ்டைல் தேங்காய் சாதமும் மிகவும் சூப்பராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 1/2 கப், தேங்காய் பால் - 1 கப், துருவிய தேங்காய் - 1/2 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், எலுமிச்சை இலை - 2, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை: முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பால், தண்ணீர், எலுமிச்சை இலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பின் அடுப்பில் வைத்து, தீயை குறைவாக வைத்து நன்கு 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரிசியைப் போட்டு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் தீயை குறைவிலேயே வைத்து, அரிசியை வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் ஆனப் பின்னர், மூடியைத் திறந்து, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பின் அதில் உள்ள எலுமிச்சை இலையை எடுத்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். இறுதியில் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான தாய் ஸ்டைல் தேங்காய் சாதம் ரெடி!!! இதனை மதிய வேளையில் விருப்பமான குழம்பு ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Offline MysteRy

5. தேங்காய் மீன் குழம்பு



மீன் குழம்பில் பல ஸ்டைல்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்டைல் தான் தேங்காய் அரைத்து ஊற்றி செய்வது. பொதுவாக இந்த முறையானது கேரளாவில் தான் அதிகம் செய்யப்படும். இந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பை வீட்டில் முயற்சித்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்: மடவை மீன் - 1/2 கிலோ (நன்கு கழுவி வெட்டியது), வெங்காயம் - 3 + 1, பூண்டு - 2 பற்கள் (நறுக்கியது), புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், தேங்காய் - 2 கப் (நறுக்கியது), மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: * முதலில் மிக்ஸியில் தேங்காய், பூண்டு, 3 வெங்காயம், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். * அது சமயம் மீதமுள்ள 1 வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, பின் புளி சாறு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். * பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். * இறுதியில் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து, குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான தேங்காய் மீன் குழம்பு ரெடி!!!

Offline MysteRy

6. காரமான தேங்காய் கச்சோரி



கச்சோரியில் இனிப்பு, காரம் என்று உள்ளன. மேலும் இந்த கச்சோரியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் காரமாக செய்யப்படும் கச்சோரி மாலை வேளையில் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 கப் (துருவியது), பச்சை மிளகாய் - 4, சர்க்கரை - 1/2 டீஸ்பூன், ஓமம் - 1/2 டீஸ்பூன், மல்லி தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி - 1 டீஸ்பூன், மைதா/கோதுமை மாவு - 3 கப், தண்ணீர் - 1 கப், நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 கப், உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, அரைத்த தேங்காய் பேஸ்ட்டை போட்டு, 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு மல்லி தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்கு கிளறி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை/மைதா மாவைப் போட்டு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, அந்த உருண்டைகளின் நடுவே ஒரு ஓட்டை போட்டு, அதில் தேங்காய் மசாலாவை வைத்து, மூடி, பின்பு அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சிறு பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய் கச்சோரி ரெடி!!! இதனை விருப்பமான மசாலா அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Offline MysteRy

7. தேங்காய் தக்காளி சட்னி



தோசை, இட்லிக்கு சட்னியை நிச்சயம் செய்வோம். அந்த சட்னியில் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் சேர்த்து செய்யப்படும் தக்காளி சட்னி. இது உண்மையிலேயே அருமையான சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 1/2 கப், தக்காளி - 3 (நறுக்கியது), வெங்காயம் - 2 (நறுக்கியது), இஞ்சி - 1 இன்ச் (துருவியது), பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது), வர மிளகாய் - 2-4, கறிவேப்பிலை - சிறிது, கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, வர மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கி, பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், சுவையான தேங்காய் தக்காளி சட்னி ரெடி!!!

Offline MysteRy

8. மீல் மேக்கர் மசாலா



பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். அதிலும் தேங்காய் அரைத்து ஊற்றி செய்தால், இன்னும் சுவையாக இருக்கும்

தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 250 கிராம், வெங்காயம் - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன், சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1/2 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது), கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!

Offline MysteRy

9. கொள்ளு பொரியல்



வாரம் ஒரு முறை கொள்ளுவை உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு வலுவுடன் இருக்கும். அந்த கொள்ளுவை எப்படி செய்வதென்று யோசித்தால், அதனை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்: கொள்ளு - 2 கப், தேங்காய் - 1 (பொடியாக நறுக்கியது), துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கியது), மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப்
செய்முறை: முதலில் கொள்ளுவை இரவில் படுக்கும் போது நீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் அதனை ஒரு ஈரமான காட்டன் துணியில் போட்டு சுற்றி, 1-2 நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முளைக்கட்டிய கொள்ளு கிடைக்கும். பின்பு மிக்ஸியில் தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் புளி சாறு ஊற்றி, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து முளைக்கட்டிய கொள்ளுவைப் போட்டு, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரை திறக்க வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள கொள்ளுவை சேர்த்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்க வேண்டும். இப்போது சூப்பரான கொள்ளு பொரியல் ரெடி!!!

Offline MysteRy

10. சோயா பீன்ஸ் குழம்பு



சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள். எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் தேங்காய் சேர்த்து ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான ஒரு சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் மணிகள்- 2 கப் (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது), தேங்காய் - 1/2 கப் (துருவியது), வெங்காயம் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), கடுகு - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு ,எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது), தண்ணீர் - 1/2 கப்

செய்முறை: முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!!!