நிசப்தம் கலைக்கும்
ஓயாத சுவர்க்கோழி,
தவளைச் சத்தம்,
மின்சாரமற்ற காரிருள்,
தேநீர்க்கோப்பையோடொரு அந்தகாரம்!
மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.
என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல,
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்
குப்பையாய்
கூட்டி அள்ளிய சொற்கூட்டம் !
இலக்கியங்கள்
வல்லின மெல்லினங்கள்
யாப்பு தொகை தொடையென்று
கண்சிமிட்டியபடி
விளங்காமலே விழிக்கிறேன் !
இப்போதெல்லாம்
உதட்டில் விஷம்!!
எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.
தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.
சிரிக்க வலுவற்ற மனம்
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.
‘நான் யார்’
நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!!!