Author Topic: ~ 30 வகை குளுகுளு காய்கறி சமையல்! ~  (Read 1951 times)

Offline MysteRy

பூசணிக்காய் கலவைக் கூட்டு



தேவையானவை:
நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப்,  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:
உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

Offline MysteRy

காசி அல்வா



தேவையானவை:
முற்றிய வெள்ளைப் பூசணி (துருவியது) - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், வறுத்த முந்திரி, திராட்சை தலா - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பூசணித் துருவலை பிழிந்து நீரை நீக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி,  பூசணித் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து காய் வேகும்போது நெய் சேர்த்துக் கிளறவும். சற்றே தளர இருக்கும்போது ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி, அல்வா பதம் வரும்போது இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த முந்திரி - திராட்சை, வெள்ளரி விதை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Offline MysteRy

பூசணி - கடலைப்பருப்பு இனிப்புக் கறி



தேவையானவை:
பூசணிக்காய்த் துண்டுகள் - ஒரு கப், வேகவைத்த கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... வேகவைத்த கடலைப்பருப்பு, பூசணிக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
இதனை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

பூசணி - அவல் புட்டிங்



தேவையானவை:
துருவிய வெள்ளைப் பூசணி - அரை கப், ஊறவிட்டு வடிகட்டிய அவல் - ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 3.

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதில் பூசணித் துருவல் சேர்த்து வதக்கி... ஊறிய அவல், உப்பு, வேர்க்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, உதிர் உதிராக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, வயிற்றுக்கு இது குளுமையோ குளுமை!

Offline MysteRy

இளநீர் க்ளியர் சூப்



தேவையானவை:
இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக வாங்கவும்), தக்காளிச் சாறு - கால் கப், இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).

செய்முறை:
இளநீர், இஞ்சிச் சாறு, தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, நுரைத்து வருகையில்... தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும். மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசிக்காது.

Offline MysteRy

தோசைக்காய் பருப்பு



தேவையானவை:
தோல், விதை நீக்கி நறுக்கிய தோசைக்காய் (சிறிய முலாம்பழம்போல் மஞ்சள் நிறத்தில் விதையுடன் இருக்கும்) - ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 4 (துண்டுகளாக்கவும்), கீறிய சிறிய பச்சை மிளகாய் - 6, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.

தாளிக்க:
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
தாளிக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளித் துண்டுகள், தோசைக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு நீர், வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.
இது... சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி.

Offline MysteRy

தோசைக்காய் துவையல்



தேவையானவை:
மிகவும் பொடியாக நறுக்கிய தோசைக்காய் - ஒரு கப், கொத்தமல்லி - அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள், உப்பு,  - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: 
கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை:
நறுக்கிய தோசைக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் வறுத்து... நறுக்கிய கொத்தமல்லி, சிறிதளவு நீர்சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தோசைக்காய் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சாதம், இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன்.

Offline MysteRy

தர்பூசணி ரசம்



தேவையானவை:
தர்பூசணி சாறு - ஒரு கப், துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்த நீர் - அரை கப்,  புளித் தண்ணீர் - சிறிதளவு, முழு நெல்லிக்காய் சாறு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப்பொடி, உப்பு - சிறிதளவு.

தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... பருப்பு நீர், தர்பூசணி சாறு, நெல்லிச்சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும். இதனுடன்  உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப் பொடி சேர்த்து நுரைத்து வரும்போது... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். 
இந்த ரசம், இனிப்பு - புளிப்பு சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.

Offline MysteRy

பூசணி - அவல் பிரேக்ஃபாஸ்ட்



தேவையானவை:
துருவிய இளம் வெள்ளைப் பூசணி - அரை கப், அவல் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தயிர் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), நறுக்கிய கொத்தமல்லி - புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு. 
தாளிக்க: காய்ந்த மிளகாய் - 2, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
பூசணித் துருவல், கேரட் துருவல், உப்பு, அவல், எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், தயிர், கொத்தமல்லி - புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து...  பூசணி - அவல்  கலவையை சேர்த்து 2 நிமிடம் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
பூசணித் துருவலில் இருக்கும் நீரே அவல் ஊறுவதற்கு போதுமானது.

Offline MysteRy

முள்ளங்கி - வெள்ளரி ராய்தா



தேவையானவை:
இளம் முள்ளங்கி - ஒன்று (தோல் நீக்கி துருவவும்), வெள்ளரிக்காய் - ஒன்று (துருவவும்), தக்காளி - ஒன்று (நறுக்கவும்), தயிர் - அரை கப், தனியா - சீரகப்பொடி - சிறிதளவு, சர்க்கரை, உப்பு - தலா ஒரு சிட்டிகை. 

செய்முறை:
தயிரை நீர் விடாது கடைந்து, மற்ற பொருட்களை சேர்த்துப் பரிமாறவும் (பயன்படுத்துவதற்கு சற்று முன்பு தயாரிக்கவும். முதலிலேயே தயாரித்தால் நீர்த்துவிடும்).
தயிர், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி காம்பினேஷன் உடலை ஏ.சி. போல் வைத்திருக்கும்.

Offline MysteRy

வெள்ளரி - புடலை மிக்ஸ்



தேவையானவை:
துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி, புடலங்காய் (சேர்த்து) - ஒரு கப், பொட்டுக்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 3, சீரகம் - கால் டீஸ்பூன், தயிர் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்து தயிருடன் கலக்கவும். வெள்ளரி, புடலங்காயை நறுக்கி, தேங்காய் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்க்கவும். இதை தேங்காய் - தயிர் விழுதில் சேர்த்து, மேலே பொட்டுக்கடலைப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

பூசணி குடல் தோசை



தேவையானவை:
வெள்ளைப் பூசணியின் நடுவில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதி (விதைகளை நீக்கிவிடவும்) - அரை கப், பச்சரிசி, புழுங்கலரிசி -  தலா அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் -  சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை கழுவி, ஒன்றாக 4 மணி நேரம் ஊறவிடவும் பிறகு அதனுடன் உப்பு, பூசணியின் பஞ்சு போன்ற பகுதி,  பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண்டரில் பொங்கப் பொங்க அரைத்து, 2 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக் கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இந்த தோசை...  உப்பு, காரம், புளிப்பு என அமர்க்களமான சுவையில் இருக்கும்.

Offline MysteRy

புடலங்காய் ரிங்க்ஸ்



தேவையானவை:
விதை நீக்கி வட்டமாக நறுக்கிய நீள புடலங்காய் - 20 வில்லைகள், அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு (சேர்த்து) - முக்கால் கப், மிளகாய்த்தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ் பூன், எண்ணெய் - கால் கிலோ, ஓமம், உப்பு - சிறிதளவு. 

செய்முறை:
மாவு வகைகளுடன் உப்பு, ஓமம்,  மிளகாய்த்துள், மிளகுத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். புடலங்காய் வில்லைகளை மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்). மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

புடலங்காய் பால் கூட்டு



தேவையானவை:
குட்டைப் புடலை (நறுக்கியது) - ஒரு கப், தேங்காய்ப்பால் - இரண்டு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
நறுக்கிய புடலங்காயை உப்பு சேர்த்து வேகவிட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும். பிறகு, இதனுடன் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால், விரைவில் சாப்பிட்டுவிட வேண்டும். மிச்சம் வைத்து உண்ணக் கூடாது. தேங்காய்ப்பாலுக்கு... குடல், தொண்டைப் புண்ணை ஆற்றும் சக்தி  உண்டு.

Offline MysteRy

கேரளா  ஸ்பெஷல் புடலங்காய் கறி



தேவையானவை:
நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், ஊறவைத்த பயத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
அரைக்க: தேங்காய் - அரை மூடி (துருவவும்), சிறிய பச்சை மிளகாய் - 3
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளித்து, பயத்தம்பருப்பை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் புடலங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். நீர் விடாமல் மையாக அரைத்த  தேங்காய் - பச்சை மிளகாய் விழுதை இதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கிளறி, கறி பதம் வரும்போது இறக்கவும்.