Author Topic: ~ பசியைத் தூண்டும் தானிய ரசம்! அம்மா ரெசிப்பி! ~  (Read 463 times)

Offline MysteRy

பசியைத் தூண்டும் தானிய ரசம்!
அம்மா ரெசிப்பி!



'எங்க பரம்பரையில் வந்த பாரம்பரிய ரசம். எனக்கு என் மாமியார் சொல்லிக்கொடுத்தாங்க.அவங்களுக்கு அவங்க அம்மா சொல்லித் தந்தாங்க. அதனால், என் பையன் இதை 'கொள்ளுப் பாட்டி’ ரசம்னுதான் சொல்லுவான். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். அப்படியே ரசமாகவும் குடிக்கலாம். ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்!'' என்று 'தானிய ரசத்தின்’ சிறப்பைச் சொல்லும் சென்னை தி.நகரைச் சேர்ந்த சுபத்ரா பாலசுப்ரமணியன், ரசம் வைக்கும் முறையைக் கூறுகிறார்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு, பட்டாணி, வெள்ளை மற்றும் கருப்பு கொண்டைக் கடலை, சோயா - தலா 2 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை, தக்காளி - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கடுகு, நெய் - தலா 2 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க:
தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்ப்பூ (தேவையானால்) - 2 டீஸ்பூன்.

செய்முறை:
 எல்லாப் பருப்புகளையும் முதல் நாளே இரவு ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 5, 6 விசில் வரும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வேகவைத்த பருப்புகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, நன்றாக அரைக்கவும்.



புளியைக் கரைத்து, தக்காளி, உப்பு சேர்த்து, புளி வாசனை போகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் மசாலாவை போட்டு, எடுத்துவைத்த பருப்பு வேகவைத்த நீரை விட்டுக் கொதிக்கவிடவும். நெய் விட்டு, கடுகு தாளித்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். சுவையான தானிய ரசம் ரெடி!

சித்த மருத்துவர் சுரேஷ்:
புரதச்சத்து மிகுந்த ரசம் இது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சூப் போல் செய்தும் கொடுக்கலாம்.  பசியைத் தூண்டும். கொழுப்பை சேரவிடாது. பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், ரசத்தில் இரண்டு பல் பூண்டைத் தட்டிப் போட்டுக் கொடுக்கலாம்.