Author Topic: ~ மறந்துபோன மருத்துவ உணவுகள்! ~  (Read 1853 times)

Offline MysteRy

மோர்க்களி



தேவையானவை:
புளித்த தயிர் - அரை கப், அரிசி மாவு - முக்கால் கப், மோர்மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - 4, 5, மாவடு தண்ணீர் அல்லது ஊறுகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
அரிசி மாவையும் புளித்த தயிரையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் மோர்மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும். ஊறுகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரிசிமாவு, தயிர் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறினால், அடியில் ஒட்டாதபடி சுருண்டு அல்வா பதத்தில் வரும். இறக்கி வைத்து, சுடச்சுட சாப்பிடவேண்டும்.

குறிப்பு:
விரல் நுனியால் எடுத்து, நாக்கில் வைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும். கைதொடும் பதம், களியின் ருசி, காரம், உப்பு, புளிப்பு சுவை அருமையாக இருக்கும். காலை 10 மணிக்கு மோர்க்களி சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டால், வயிறு 'திம்’மென்றாகிவிடும்.

மருத்துவப் பலன்கள்:
வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய பாரம்பரிய உணவு இது.

Offline MysteRy

பாரம்பரிய சமையல் நிபுணர் சுந்தரவல்லி வழங்கிய மருத்துவ உணவுகள் இங்கே...

சிறுதானியக் கஞ்சி



தேவையானவை:
வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, பாசிப்பயறு, கருப்பரிசி, சிவப்பரிசி, கார் அரிசி, வறுத்து ரவையாகப் பொடித்த பார்லி, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு, பாதாம் - தலா 5, தோல் நீக்கிய சுக்கு - 5 கிராம், ஏலம், கிராம்பு - தலா 2.

செய்முறை:
பார்லியைத் தவிர மற்ற பொருட்களை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். தேவையானபோது ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் பொடியைப் போட்டு, அரை டீஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து, நன்றாகக் கலந்து பரிமாறலாம். தேவையெனில் வெல்லத்துக்குப்  பதில் உப்பும் நீர் மோரும் கலந்து பரிமாறலாம்.

மருத்துவப் பலன்கள்:
பசி தாங்கக்கூடிய ஆரோக்கிய பானம் இது.

Offline MysteRy

தூதுவளைக் குழம்பு



தேவையானவை:
முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி, மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறு நெல்லிக்காய் அளவு,  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும். தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

மருத்துவப் பலன்கள்:
மூச்சுத் திணறல், சுவாசப் பாதை நோய்கள், ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு.

Offline MysteRy

கற்றாழைப் பச்சடி



தேவையானவை:
கற்றாழைச் சோறு - 100 கிராம் (நன்றாகக் கழுவியது), வெல்லம் - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
கற்றாழையில் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை, நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கற்றாழை சோறு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி, வெல்லம் உருகி பச்சடி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

மருத்துவப் பலன்கள்:
வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்காமல் பாதுகாத்து, வறட்சியைத் தடுக்கும் உணவு இது.

Offline MysteRy

வெந்தயப் பருப்பு



தேவையானவை:
ஊறவைத்த வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பாசிப் பருப்பு - 5 டீஸ்பூன், தக்காளி - 3, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 3 சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி - தலா சிறிதளவு, நெய் / நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஊறவைத்த வெந்தயம், கழுவிய பாசிப் பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, வெந்த பருப்பு கலவையைச் சேர்த்து மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

மருத்துவப் பலன்கள்:
நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு புதுவித மாற்று பருப்பு செய்முறை இது.

Offline MysteRy

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்



தேவையானவை:
மாகாளிக் கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக்கியது) - 50 கிராம், இஞ்சி (தோல் நீக்கி நறுக்கியது) - சிறு துண்டு, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும். இதை அப்படியே பரிமாறலாம். தேவையெனில் தாளித்தும் உபயோகப்படுத்தலாம்.

மருத்துவப் பலன்கள்:
செரிமானப் பாதையில் கோளாறு உண்டாக்கும், 'ஹெலிகோபாக்டர் பைலரி’ (பிமீறீவீநீஷீதீணீநீtமீக்ஷீ றிஹ்றீஷீக்ஷீவீ) - என்னும் கிருமியைக் கொல்லக்கூடிய ஊறுகாய் இது. குடற்புண்ணை ஆற்றக்கூடியது.

Offline MysteRy

நன்னாரி, வெட்டிவேர் சர்பத்



தேவையானவை:
நன்னாரி, வெட்டிவேர், வெல்லம் - தலா 50 கிராம்.

செய்முறை:
நன்னாரியை சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும், வெட்டி வேரையும் சிறு துண்டுகளாக்கவும். ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய கஷாயத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, வெல்லம் உருகி பாகுப் பதம் வந்ததும் இறக்கி, மீண்டும் வடிகட்டி உபயோகப்படுத்தவும். ஒரு பங்கு சர்பத், ஒரு பங்கு குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறலாம்.

மருத்துவப் பலன்கள்:
வெயில் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் பாரம்பரிய பானம் இது.

Offline MysteRy

ஆவாரம் பூ டீ



தேவையானவை:
ஆவாரம் பூ - 10, லவங்கப் பட்டை - சிறு துண்டு.

செய்முறை:
சுத்தம் செய்த ஆவாரம்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, லவங்கப் பட்டை சேர்த்து 2-5 நிமிடங்கள் மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டி, சூடாக அருந்தலாம். சர்க்கரை அல்லது தேன் சேர்க்கத் தேவை இல்லை.

மருத்துவப் பலன்கள்:
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மாற்று தேநீர்.

Offline MysteRy

கொடிக்கருணைக் கிழங்கு துவையல்



தேவையானவை:
துருவிய கொடிக்கருணைக் கிழங்கு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மிளகு - ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன் வறுத்த பொருட்கள், மீதம் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துப் பரிமாறவும். தாளிக்கத் தேவை இல்லை.

மருத்துவப் பலன்கள்:
தென் தமிழகத்தில் அதிகமாகக் கிடைக்கும் இக் கிழங்கு, உடம்பு வலி, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும். 

Offline MysteRy

கொடம்புளி சர்பத்



தேவையானவை:
கொடம்புளி (கழுவி, பொடியாக நறுக்கியது) - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், பொடித்து, வறுத்து, அரைத்த சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன், கருப்பு உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, ஊறவைத்த தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சி வடிகட்டி, பிறகு அதனுடன் அரைத்த விழுது, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கருப்பு உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

மருத்துவப் பலன்கள்:
'மலபர் டாமரிண்ட்’ எனப்படும் இது, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கும். 

Offline MysteRy

நெல்லிக்காய் ரசம்



தேவையானவை:
நெல்லிக்காய் - 2, இஞ்சி - 5 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப், ரசப்பொடி - ஒரு ஸ்பூன். தாளிக்க: நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.

ரசப்பொடி செய்முறை:
சீரகம் - ஒரு டீஸ்பூன், வறுத்த வெந்தயம், பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன். இவை எல்லாவற்றையும் காயவைத்து, குருணையாகப் பொடித்துக்கொள்ளவும்.

செய்முறை:
இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். நெல்லிக்காய், இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்து உப்பு, ஒரு டீஸ்பூன் ரசப்பொடி, பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடாயில் நெய்/எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டவும். புளி வேண்டாம் என்று நினைப்பவர்கள், புளியைத் தவிர்த்து, கடைசியாக இறக்கும்போது அரை மூடி எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சேர்க்கலாம்.

மருத்துவப் பலன்கள்:
வைட்டமின் - சி சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பாற்றாலைக் கொடுக்கும்.

Offline MysteRy

பாட்டி சொல்லும் கைவைத்தியம்

ரேவதி சங்கரன்



 பர்கர், பீட்ஸா என்று மைதாவும் சீஸையும் குழப்பிய கலவையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரிக்க முடியாமல் திணறும் வயிறுகளுக்கு...
தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வைத்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் செரிமானம் ஆகிவிடும்.
 பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கருவளையம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெண்ணெய் அல்லது  தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலாம். பன்னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர்.
 தலையிலே நீர் கோத்துக்கொண்டால், தலைபாரம், கண்ணிலே மூக்கிலே நீராகக் கொட்டிக்கொண்டு, தும்மல், தொண்டைவலி இதெல்லாம் தொடர்ந்து வரும். ஜலம் என்றால் தண்ணீர்; அதனாலே ஏற்படுகிற உபாதை, தோஷம்; அதுதான் ஜலதோஷம். இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான்.
ஒரு வெற்றிலையைக் கழுவித் துடைத்து, அதிலே கிராம்பு [லவங்கம்] 2, ஏலக்காய் 2, மிளகு 6, 7, கொஞ்சம் வெல்லம் வைத்துச் சுருட்டி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால், மூன்றாம் நாள் சளி குறைந்து, ஜலதோஷம் பறந்துவிடும்.
 வேர்க்குரு இருந்தால், இரவு படுப்பதற்கு முன்னால், சந்தனக் கல்லிலே நன்கு சந்தனத்தை இழைத்து, அதில் பன்னீர் விட்டுக் குழைத்து, வேர்க்குரு இருக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் தடவினால் வேர்க்குரு போய்விடும். கிராமத்துப் பக்கம், பனை நுங்கு கொட்டிக்கிடக்கும். அந்த நுங்கை நன்கு தேய்த்துப் பிள்ளைகளுக்குக் குளிப்பாட்டுவார்கள்.
 பெரியார் அடிக்கடி சொன்ன வெங்காயம், வேர்க்குருவை விரட்ட உதவும். வெங்காயத்தை இடித்துச் சாறு எடுத்து, வேர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலாம்.
 சிலருக்கு வேனல் கட்டி வரும். அதற்கு மருந்து, செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து, அதிலே விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, கட்டி மேல் போட்டால், கட்டி உடைந்துவிடும். 



தொண்டைப்புண், தொண்டைவலி:

சாதம் கொதிக்கும்போது, மேலாக எடுத்த கொதிகஞ்சியில் பனங்கல்கண்டு, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாகக் குடிக்கவும்.
அல்லது, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிப் பனங்கல்கண்டு சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.



இருமல் கஷாயம்:
இரண்டு தம்ளர் தண்ணீரில், சிறு துண்டு, சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, உடைத்த மிளகு, கொட்டை நீக்கிய பேரீச்சங்காய், வால் மிளகு... இவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும், மேலாக இறுத்து அதில் பனங்கல்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால், இருமல் குணமாகும். அடியில் இருக்கும் வண்டலைக் கொட்டிவிடாமல், மேலும் ஒரு தடவை அதில் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

வறட்டு இருமல்:
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால், இருமல் குறையும்.
பாலில் ஆறேழு பேரீச்சம்பழங்களை வேகவைத்துச் சாப்பிட்டால், இருமல் குறையும். அதனுடன் ஓமவல்லி இலைகளையும் சேர்க்கலாம்.

இயற்கை ஷாம்பூ:
ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப் பங்கு, புங்கங்காய் ஒரு கைப்பிடி... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துவைத்துக்கொள்ளவும். முடி வளர உதவும், ரசாயனக் கலப்பில்லாத, பக்க விளைவுகள் இல்லாத வீட்டு ஷாம்பூ இது.

கண் அரிப்பு, கிரிக் கட்டி (கண்கட்டி):
கடுக்காய்ப் பிஞ்சை, சந்தனக் கல்லில் இழைத்துக் கண் மீது தடவிக்கொண்டு படுத்து உறங்கினால், 2 நாட்களில் சரியாகும். பழங்கால மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டிருக்கும். அதை சந்தனக் கல்லில் இழைத்து, கிரிக்கட்டி மீது தடவினால் குணமாகும்.