Author Topic: ~ மறந்துபோன மருத்துவ உணவுகள்! ~  (Read 1857 times)

Offline MysteRy



''ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் குடும்மா! தொட்டுக்கிறதுக்கு, ஒரே ஒரு வரமிளகாய் வெச்சு, கொள்ளுத் துவையல் அரைச்சிரு!'' என்று திருகையில் (எந்திரம்) உளுந்தையோ, அரிசியையோ போட்டு ரவையாக உடைத்தபடி, கண்டாங்கிச் சேலை கட்டிய அப்பத்தாக்களும் ஆயாக்களும் சொல்லிய காலமெல்லாம் கடந்து, நைட்டியில் பாட்டிகள் உலவியபடி, பேரப்பிள்ளைகளுக்கு உணவு, மருந்து எதுவானாலும் இன்டர்நெட்டில் தேடிக் கொடுக்கும் காலம் இது என்பதால், 'மறந்துபோன’ மருத்துவ உணவுகளை நினைவூட்டும் நேரம் இது!
'பாலூட்டும் தாயா? பால் சுரக்க, பூண்டு நிறையப் போட்ட இளங்குழம்பு’... 'வயசுக்கு வந்த பிள்ளையா? இடுப்புக்கு வலுவூட்ட, 'தோல் உளுந்தங்களி!’ 'வயிற்றுப் புண், வாய்ப்புண்ணா? புண்ணை ஆற்றும், 'மணத்தக்காளிக் கீரைக் கடையல்’!
இப்படி, மருத்துவரிடமே செல்லாமல், உணவிலேயே நோய்களைச் சரிசெய்து, உடலைச் சீராக்கிய நமது முன்னோர்கள் தந்த மாபெரும் பொக்கிஷங்கள் பலவற்றை இழந்துவிட்டோம். மீதியை மறந்துவிட்டோம்!
கொஞ்சநஞ்சம் மிச்சம் இருக்கும் மருத்துவ உணவுகளை நமது டாக்டர் விகடன் வாசகர்களுக்காக வழங்குகிறார்கள், பாரம்பரியப் பண்பாடுகளில் அக்கறை மிக்க ரேவதி சங்கரன் மற்றும் சுந்தரவல்லி. ரேவதி சங்கரன் வழங்கிய உணவுகளை, செய்து வழங்கியிருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஹேமா ராமன்.
ஒவ்வொரு உணவுக்குமான மருத்துவக் குறிப்பை, மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன் அளித்திருக்கிறார். மருத்துவ உணவுகள் செய்முறை தவிர, சிறு சிறு உடல் உபாதைகளுக்கான கை வைத்தியங்களைத் தந்திருக்கிறார் ரேவதி சங்கரன்.
இந்த இணைப்பு, உங்களுக்கு மறந்து போகாத மருத்துவப் பொக்கிஷமாக இருக்கட்டும்!




ரேவதி சங்கரன் வழங்கிய மருத்துவ உணவுகள்...


Offline MysteRy

அஷ்டாம்சக் கஞ்சி



தேவையானவை:
 கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது. 

மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

Offline MysteRy

பூண்டு - மிளகுக் குழம்பு



தேவையானவை:
 உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.  மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்:
பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும்.  நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு. 

Offline MysteRy

அமிர்தப் பொடி



(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)

தேவையானவை:
தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.

செய்முறை:
 கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்:
நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

Offline MysteRy

கொள்ளு குழம்பு



தேவையானவை:
கொள்ளு - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.
இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.

Offline MysteRy

கறிவேப்பிலைக் குழம்பு



தேவையானவை:
விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.

குழம்புக்கு:
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும். 

மருத்துவப் பலன்கள்:
ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

Offline MysteRy

பொரிவிளங்காய் உருண்டை



தேவையானவை:
பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.

Offline MysteRy

தேங்காய்க் கஞ்சி



தேவையானவை:
அரிசி - ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.

செய்முறை:
அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல்  கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்:
மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

நவதானிய அடை



தேவையானவை:
(சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.

Offline MysteRy

பரிபூரணப் பொங்கல்



தேவையானவை:
பச்சரிசி - ஓர் ஆழாக்கு, பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
அரிசி, பருப்பைக் களைந்துவைக்கவும். பிரஷர் குக்கரில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, அதில் பெருங்காயம், கடுகு பொரியவிட்டு, உளுத்தம்பருப்பு, சீரகம், கிள்ளிய மிளகாய், மிளகுத்தூளை சேர்த்து நன்கு வறுக்கவும். மஞ்சள்தூளை,  கறிவேப்பிலை சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது, களைந்துவைத்த அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வந்ததும் இறக்கி, அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ளக் கெட்டித் தயிர்.

மருத்துவப் பலன்கள்:
பெரிய அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவமனை சிகிச்சை முடிந்து, வீடு திரும்புபவர்களுக்கு, குடலுக்கு இதமான உணவு. மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும்.

Offline MysteRy

பிரண்டைத் துவையல்



தேவையானவை:
நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.

செய்முறை:
இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு,  அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

குறிப்பு:
பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்:
எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.

Offline MysteRy

இஞ்சிப் பூண்டு தொக்கு



தேவையானவை:
 தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

மருத்துவப் பலன்கள்:
அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.

Offline MysteRy

சுக்கு மல்லி காபி



தேவையானவை:
மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.

செய்முறை:
எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

மருத்துவப் பலன்கள்:
உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம். 

Offline MysteRy

தினை லாடு



தேவையானவை:
சுத்தம் செய்த தினை - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கட்டி (அல்லது தேவையான அளவு), நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வெறும் சட்டியில் தினையை வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும். கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

மருத்துவப் பலன்கள்:
புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

Offline MysteRy

தண்டுக்கீரை பொரித்த குழம்பு



தேவையானவை:
தண்டுக்கீரை - ஒரு கட்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகு, சாம்பார் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:
கீரைத்தண்டையும் கீரையையும் கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வேகும்போது சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தேங்காய், சீரகம், மிளகு மூன்றையும் பச்சையாகவே அரைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, அரைத்த விழுது, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

மருத்துவப் பலன்கள்:
நார்ச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் இதில் நிறைவாக இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது.