1.11 சுரத்திற் புனலழைத்த படலம்
680   முன்னிலை யாசு நடந்திட நடந்து
    முதிரட விகள்கடந் ததற்பின்
    றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்
    றரையினிற் ஜிபுறயீ லிறங்கி
    யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண
    மிளம்பிடி யொட்டையொன் றௌிதாய்ப்
    பன்னரும் பாதைத் தலைதடு மாறப்
    பண்பொடு கொடுநடத் தினரே.   1.11.1
681   மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி
    வந்தவொட் டகம்புது மையதாம்
    பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்
    பிசகின தருநெறி கானிற்
    செட்டரு மெருதும் புரவியு மிடைந்து
    சிறுநெறி வயின்வெகு தூர
    மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி
    யிருந்ததுந் தேய்ந்தபோ யதுவே.   1.11.2
682   ஆசெனு மரச னொட்டகக் கயிற்றை
    யசைத்திடுந் திசையெலா நடப்ப
    வாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும்
    வழிகெடத் தனித்தனி மறுகத்
    தேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல்
    செய்குவ தெனமன மிடைந்து
    வீசிய கானற் சுடச்சுடக் கருகி
    விடர்விடும் பாலையி லடைந்தார்.   1.11.3
683   பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்
    பெரும்புறக் கடலினைத் தேக்கித்
    தன்னகங் களித்து வடவையின் கொழுந்து
    தனிவிளை யாடிய தலமோ
    பன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட
    படையொடு மிருந்தபா சறையோ
    வுன்னதக் ககன முகடற வுருக்கு
    முலைகொலொ வெனவறி கிலமால்.    1.11.4
684   பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்
    பற்றறாக் கானலிற் றேய்ந்த
    கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்
    கணங்களின் குலமெனத் தோன்று
    மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்
    திடுந்தரை யொருதுளி நீரு
    மருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங்
    காள்வழக் கற்றவெங் கானம்.   1.11.5
685   பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்
    பரப்பினைப் புனலென வோடிச்
    சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க
    டனித்தனி மறுகிய மறுக்க
    மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்
    மருங்கினி லிரந்திரந் திடைந்து
    காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
    கருத்தினில் வருத்தமொத் தனவே.    1.11.6
686   கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்
    கட்டையி னுட்டுளை கிடந்து
    புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்
    புறந்திரிந் துறைந்திடா திறந்து
    முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி
    முளைதொறுங் கிடப்பதைச் செறிந்த
    கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்
    குறுகிடப் பயந்துகான் மறுகும்.   1.11.7
687   மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப
    முறைமுறை நெட்டுடற் கரும்பே
    யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா
    லிடுவதற் கரிதுசெந் நெருப்புத்
    தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து
    தரைபிளந் ததுவதிற் பிறந்த
    வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ
    வறக்கொடுங் கானலென் பதுவே.   1.11.8
688   சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து
    சென்னெறி சிறிதுந்தோன் றாமற்
    காந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு
    வடக்குமேற் கெல்லைகா ணாமன்
    மாந்தரு மாவுந் திசைதடு மாறி
    வாயீனி ரறவுலர்ந் தொடுங்கி
    யேந்தெழில் கருகி மனமுடைந் துருகி
    யெரிபடு தளிரையொத் திடுவார்.   1.11. 9
689   மன்னவ னாக முன்னடந் ததற்கோர்
    வல்வினை பின்றொடர்ந் ததுவோ
    வின்னைநா ளகில மடங்கலுந் தழலா
    லெரிபடு காரணந் தானொ
    முன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த
    முகுர்த்தமோ பவங்கண்முற் றியதோ
    பன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம்
    பாலையிற் படும்வர லாறே.   1.11.10
690   பாடுறு புனலறத் றொவ்வொரு காதம்
    படுபரற் பரப்புநாற் றிசைக்கு
    மோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட்
    டுச்சியும் வெதுப்புற வுலர்ந்து
    வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்
    வயிற்றிடை தலைநுழத் திடுவார்
    தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ
    செறிந்திவ ணடைந்தன மென்பார்.    1.11.11
691   ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த
    மதியென வொட்டகை யதன்மேல்
    வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்
    வெண்முறு வலுமலர் முகமும்
    பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்
    பரிமள மான்மதங் கமழத்
    தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்
    துன்புறா தின்பமுற் றனரே.   1.11.12
692   பாலையி லடைந்து பசியினா லிடைந்து
    பலபல வருத்தமுற் றதுவும்
    வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும்
    விழுந்தியான் முகமுடைந் ததுவுங்
    கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்
    கூட்டிவந் துறுபவ மென்னச்
    சாலவு முரைத்தா னீதியை வெறுத்த
    தறுகணா னெனுமபூ ஜகிலே.   1.11.13
693   மூரிவெற் பனைய புயமுகம் மதுவை
    முன்னிலைத் தலைவராய் நிறுத்தித்
    தாரையிற் செலுநம் மிடர்களுந் தவிருந்
    தழலெழும் பாலையுங் குளிர்ந்து
    வேரியங் கமல வாவியங் கரையாம்
    விரைவினிற் சாமடை குவமென்
    றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா
    ரணிதிகழ் புயத்தபூ பக்கர்.   1.11.14
694   ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா
    ரெழின்முகம் மதுவுமுன் னிலையாய்ப்
    பாதையி னடப்பப் பெரியவ னருளின்
    பணிகொடு ஜிபுறயீ லிறங்கிப்
    பேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்
    பிடித்தன ரரைநொடிப் பொழுதிற்
    றீதற நெறியுங் தெரிந்தன நான்கு
    திசைகளுந் தௌிதரத் தெரிந்த.   1.11.15
695   தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச்
    சாருநன் னெறியினைச் சார்ந்தோம்
    நிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து
    நிழலிவர்க் கிடுவதுங் கண்டோம்
    மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி
    யலைந்திடு வருத்தமுஞ் தவிரப்
    புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது
    போழ்திலென் றனைவரும் புகன்றார்.    1.11.16
696   மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து
    முகம்மது மேறுவா கனத்தின்
    கந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின்
    கருத்தறிந் தொட்டகங் களித்துச்
    சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்
    தொட்டிடத் தொட்டவப் போதிற்
    சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச்
    செழித்தெழுந் ததுநதிப் பெருக்கே.    1.11.17
697   ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி
    யழகுறு மருதம தாக்கத்
    தேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத்
    திரள்களும் குமுதமும் விரிய
    வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து
    மென்றழை குளிர்தரப் பூத்துத்
    தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்
    சொரிதரச் சோலைசூழ்ந் தனவே.   1.11.18
698   வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்
    வகுதையம் பதியுசை னயினார்
    பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்
    பிறந்தமெய்த் துரையபுல் காசீஞ்
    சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்
    சூழ்ந்திருந் தணிதிகழ் வதுபோற்
    குற்றமி னதியி னிருகரை மருங்குங்
    குறைவறத் தளிர்த்தன தருக்கள்.    1.11.19
699   நானமும் புழுகும் பாளிதக் குலமு
    நறைகெட மிகுந்தவா சமதாய்த்
    தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட
    தெங்கிள நீரினு மினிதா
    யூனமி னதிய னொருகைநீ ரருந்தி
    யுடல்குளிர்ந் தரும்பசி யொடுங்கி
    யானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்
    கனைவரு மதகளி றானார்.   1.11.20