Author Topic: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~  (Read 2725 times)

Offline MysteRy

~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« on: April 16, 2014, 01:25:58 PM »
தேங்காய் போளி



தேவையானவை:
மேல் மாவுக்கு: மைதா 200 கிராம், உப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 100 கிராம்.
பூரணத்துக்கு: நைஸாக துருவிய கொப்பரை - 250 கிராம், சீவிய முந்திரி - 50 கிராம், பொடி செய்த பாகு வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் - சிறிதளவு, நெய், எண்ணெய் சேர்த்து - 100 கிராம்.

செய்முறை:
மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு.
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, துருவிய கொப்பரை, சீவிய முந்திரி சேர்த்து பூரணமாக கிளறி இறக்கவும். ஆறிய பின் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்து சிறிய ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டவும். மேல் மாவு சிறிதளவு எடுத்து விரித்து, அதனுள் பூரணம் நிரப்பி மூடி, வாழையிலையில் வைத்து கையால் தட்டி, சூடான தவாவில் போட்டு நெய் - எண்ணெய் கலவை விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #1 on: April 16, 2014, 01:37:46 PM »
பருப்பு போளி



தேவையானவை:
மேல் மாவுக்கு: மைதா 200 கிராம், அரிசி மாவு - அரை கப், உப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 100 கிராம்.
பூரணம் செய்ய: மலர வெந்த துவரம்பருப்பு - 2 கப், சர்க்கரைத்தூள்- ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு, பூரா சர்க்கரை (அ) பொடித்த சாதாரண சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை:
மைதா, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணிநேரம் ஊறவிடவும். இதுதான் மேல் மாவு. வெந்த துவரம்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். மசிந்தவுடன் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். வாணலியில் நெய் விட்டு துவரம்பருப்பு - சர்க்கரை கலவை சேர்த்துக் கிளறி, இறுகி வரும்போது இறக்கி, ஏலக்காய்த்துள் சேர்த்தால்... பூரணம் தயார்.
மேல் மாவு சிறிது எடுத்து, ஆரஞ்சுப் பழ அளவு துவரம்பருப்பு பூரணம் உருட்டி அதில் வைத்து மூடி, அரிசி மாவில் ஒற்றி எடுத்து. குழவியால் போளியாக இட்டு, சூடான தவாவில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். போளியை தட்டில் வைத்து, நெய் விட்டு, சிறிதளவு சூடான பால் சேர்த்து, பூரா சர்க்கரை (அ) பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும்.
இதை 'பேளே ஹோளிகே’ என அழைப்பர். இதை சுடும்போது  நெய்/எண்ணெய் விடுவது இல்லை.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #2 on: April 16, 2014, 01:43:13 PM »
அக்கி ரொட்டி



தேவையானவை:
பச்சரிசி மாவு - கால் கிலோ, தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), கொத்தமல்லி -  ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசையவும். ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம்  எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது. விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #3 on: April 16, 2014, 01:45:44 PM »
புளிப்பு  உப்பு  கார தோசை



தேவையானவை:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு, குண்டு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து ஊறவிடவும் (இரவு செய்யும் தோசைக்கு காலையிலே ஊற வைக்க வேண்டும்). புளியை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பொருட்களுடன் புளியின் சாறைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை புளிக்கவிடத் தேவையில்லை. தோசை வார்க்கும் முன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு  சுட்டெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #4 on: April 16, 2014, 01:47:28 PM »
வெங்காய கூட்டு



தேவையானவை:
மலர வேகவிட்ட பாசிப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடித்த மிளகு - சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, நெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் நெய்யை காயவிட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து... சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம். சூடாகத்தான் பரிமாற வேண்டும். மிளகாய்க்கு பதில் மிளகு சேர்ப்பது இதன் தனிச்சிறப்பு.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #5 on: April 16, 2014, 01:48:54 PM »
கடலைப்பருப்பு ஸ்வீட் கோசம்பரி



தேவையானவை:
வேகவிட்டு, நீரை வடித்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - அரை டீஸ்பூன், பூரா சர்க்கரை (அ) பொடித்த சாதாரண சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
 வெந்த கடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பரிமாறும் முன் பூரா சர்க்கரை (அ) பொடித்த சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும் (முதலிலேயே சேர்த்தால் நீர்த்துவிடும்).

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #6 on: April 16, 2014, 01:50:22 PM »
அவல் போண்டா



தேவையானவை:
தட்டை அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்), வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒன்று, பச்சை மிளகாய் (நறுக்கியது) - 3, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடிஅளவு, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 கிராம், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு கலக்கவும். இதை போண்டா சைஸில் உருட்டி, சூடான எண்ணெயில், மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #7 on: April 16, 2014, 01:52:07 PM »
ஹுளி சொப்பு



தேவையானவை:
நறுக்கிய கீரை (ஏதேனும் ஒரு வகை) - ஒரு கட்டு, கீறிய பச்சை மிளகாய் - 4, வேர்க்கடலை (வறுத்து, பொடித்தது) - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 10, புளிக் கரைசல் - சிறிதளவு, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்து பொடித்த தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து... சிவந்த பின் நறுக்கிய கீரையை அலசி சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது இறக்கி... பொடித்த வேர்க்கடலை, தனியாத்தூள் சேர்த்தால்... ஹுளி சொப்பு (புளிப்புக் கீரை) தயார். ஓடும் பதத்தில் செய்யாது... கெட்டியாக, சற்று தளர்வாக செய்யவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #8 on: April 16, 2014, 01:53:36 PM »
உடுப்பி சாறு



தேவையானவை:
துவரம்பருப்பு - அரை ஆழாக்கு (வேக வைத்து, 2 கப் நீர் சேர்த்து விளாவி வைக்கவும்), புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய தக்காளி - 2, கடுகு - கால் டீஸ்பூன், சீரகம்,
மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய்  - 4, துருவிய கொப்பரை - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை நெய்யில் வறுத்து பொடிக்கவும். வாணலியில் புளிக் கரைசல், நறுக்கிய தக்காளி, உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்பு நீர் சேர்க்கவும். லேசாக நுரைக்கும்போது வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்த்து, கொதி வரும்போது வெல்லம் சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கொத்தமல்லி தாளித்து இதனுடன் சேர்த்தால்... உடுப்பி சாறு (ரசம்) உங்கள் வீட்டிலேயே தயார்!

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #9 on: April 16, 2014, 01:55:29 PM »
கோடுபள்ளி



தேவையானவை:
மைதா மாவு, அரிசி மாவு, ரவை - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றுடன் தேங்காய் துருவல், சீரகம், உப்பு,  மிளகாய்த்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும், பின்னர் கலந்த மாவை சிறிதளவு எடுத்து விரல் போல உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு துண்டின் இரண்டு முனைகளையும் இணைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் கோடுபள்ளி (அ) விரல் முறுக்கு தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #10 on: April 16, 2014, 01:58:47 PM »
சிகிளி



தேவையானவை:
வறுத்த வெள்ளை எள் - 100  கிராம், சீவிய வெள்ளை வெல்லம் (பாகு வெல்லம் வேண்டாம். மிக்ஸியில் ஒட்டிக் கொள்ளும்) - 50 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
எள், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் நெய் சேர்த்து பிசிறி வைத்தால்... சுவையான சிகிளி (எள் ஸ்வீட் பொடி) தயார். 
நாக சதுர்த்தி, கருட பஞ்சமி தினங்களில் விரதம் இருப்பவர்கள் விசேஷ உணவாக இதைச் சாப்பிடுவார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #11 on: April 16, 2014, 02:00:26 PM »
தெம்பிட்டு



தேவையானவை:
பச்சிரிசி மாவு - 2 கப், பாகு வெல்லம் துருவியது (அ) பொடித்தது - ஒரு கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த தேங்காய் பல், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை:
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி... நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், தேங்காய் பல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது ஒரு விரத ஸ்பெஷல் ஆகும். இதைக் கொண்டு மாவிளக்கு, அப்பம், வெல்லச் சீடை என பலவும் செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #12 on: April 16, 2014, 02:02:00 PM »
ஹுரிகாளு



தேவையானவை:
முளைவிட்ட நவதானியம் - ஒரு பாக்கெட் (200/250 கிராம் - டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பொட்டுக்கடலை, வறுத்த அவல் இரண்டும் சேர்த்து - 50 கிராம், நீளமாக நறுக்கிய கொப்பரை துண்டுகள் - கால் கப், சீரக மிட்டாய் - 20 கிராம். உப்பு - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, மோர் மிளகாய் - 3, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
முளைவிட்ட தானிய வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். உப்பு, மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக்கிக் கொள்ளவும். தானியத்தை இந்த விழுதில் நன்கு புரட்டி, வெயிலில் ஒரு நாள் காயவிடவும். மறுநாள் மொறுமொறுவென இருக்கும். வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் கொப்பரைத் துண்டுகளை சிவக்க வறுத்து, காய்ந்த தானிய வகைகளுடன் சேர்க்கவும். மேலும் வறுத்த அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சீரக மிட்டாய் சேர்த்து நன்கு கலந்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்
இதை 15 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #13 on: April 16, 2014, 02:04:02 PM »
அவல் மிக்ஸர்



தேவையானவை:
தட்டை அவல் - 2 கப், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தட்டை அவலை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் வேர்கடலை (தோல் நீக்கியது), பொட்டுக்கடலை இரண்டையும் எண்ணெய் விடாமல் பொன் நிறமாக வறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். எண்ணெயின்றி வறுத்த அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து இறக்கவும். நன்கு கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை கர்நாடகா சமையல் ~
« Reply #14 on: April 16, 2014, 02:07:13 PM »
மத்தூர் வடே



தேவையானவை:
ரவை, மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், வேர்க்கடலை, வெள்ளை எள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ரவை, மைதா, அரிசி மாவு மூன்றினையும் துருவிய தேங்காயுடன் கலந்து கொள்ளவும். கலவையில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும். கலந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.