தோல்வியே
உன்னை நான் காதலிக்கிறேன்
என் தர்மபத்தினி நீயல்லவா
உன்னை சொந்தம் கொண்டாட
யாரும் வரமாட்டார்கள் அல்லவா
தோல்வியே
நீ எனது கண்ணாடி
என்னையே நான் பார்த்துக்கொள்ள
உதவுவது நீயல்லவா
தோல்வியே
நீ என் பரிமாண சிற்பி
என்னை மனிதனாக செதுக்குவது
நீயல்லவா
தோல்வியே
நீ ஒரு உலைக்களம்
என் வாழ்க்கை போராட்டத்துக்கு
ஆயுதங்கள் தயாரித்து தருவது
நீயல்லவா
தோல்வியே
நீ ஒரு சாணைக்கல்
என்னை கூர் தீட்டுவது
நீயல்லவா
தோல்வியே
நீயே எனது பள்ளிக்கூடம்
நான் புயலையே படகாக்க
கற்றுத் தந்தது
நீயல்லவா
தோல்வியே
நீ எனது குரு அல்லவா
என் அகந்தையை அடக்குவது
நீயல்லவா
தோல்வியே
நீ என்னை சுட்டது துளைத்தால் தானே
வெறும் மூங்கிலாக இருந்த நான்
புல்லாங்க்குழல் ஆனேன்
தோல்வியே
நான் சம்பாதிக்கும் பணம் நீ
உன்னால் வெற்றியை கூட
என்னால் வாங்க முடியும்