Author Topic: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~  (Read 2531 times)

Offline MysteRy

நியூட்ரிஷியஸ் பூரி



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, சீவிய குடமிளகாய் - ஒரு கரண்டி, துருவிய பீட்ரூட் - ஒரு சின்ன கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவை சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய், பீட்ரூட் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். பிசைந்த  மாவை சின்ன சின்னதாக, கொஞ்சம் திக்கான பூரிகளாக இடவும். ஒரு பூரி மேல் கொஞ்சம் காய்கறி கலவையை வைத்து, இன்னொரு பூரியை மேலே வைத்து, நன்றாக ஒட்டி கையால் ஒன்றாக சமப்படுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பூரிகளை பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

முள்ளங்கி சப்பாத்தி



தேவையானவை:
முள்ளங்கி - ஒன்று, கோதுமை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முள்ளங்கியை கழுவி, தோல் சீவி துருவி வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தேவையான தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து... துருவிய முள்ளங்கி, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பிறகு மாவை 3 சப்பாத்தியாக செய்து ஒன்றின் மேல் ஒன்று வைத்து ஒன்றாக சுருட்டி வைக்கவும். அதை 4 பாகமாக பிரித்து, ஒவ்வொன்றையும் மீண்டும் சப்பாத்தி மாதிரி தேய்த்து, தவாவில் போட்டு நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இது லேயர் லேயராக நன்றாக வரும். சுவையும் சூப்பராக இருக்கும்.

Offline MysteRy

வெஜிடபிள் பால்



தேவையானவை:
அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேகவிடவும்.
இது கலர்ஃபுல் ஆகவும், சுவையாகவும் இருக்கும்.

Offline MysteRy

வெல்ல அவல்



தேவையானவை:
கெட்டி அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து காயவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, பாகு வரும் வரையில் மீண்டும் கொதிக்கவிடவும். பாகு, தக்காளி பதம் (கையில் வைத்து உருட்டினால், தளதள என்றிருக்கும் பதம்) வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து அவலை சேர்க்கவும். பிறகு, நன்றாக கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, கடைசியாக நெய் விட்டு இறக்கவும்.

Offline MysteRy

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை



தேவையானவை:
பாசிப்பருப்பு - 2 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், பொடித்த வேர்க்கடலை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - கால் கப்,  நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து, ஆவியில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து, நெய் விட்டு உருண்டையாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

Offline MysteRy

பேன் கேக்



தேவையானவை:
கஞ்சி மாவு அல்லது கோதுமை மாவு - ஒரு கப், நறுக்கிய பீட்ரூட் அல்லது கேரட் - அரை கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பீட்ரூட் அல்லது கேரட்டை தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும். அதனுடன் கஞ்சி மாவு (அ) கோதுமை மாவு, பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). மாவை தவாவில் கனமான தோசை போல வார்த்து, மூடிவைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும். அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.

Offline MysteRy

வெல்ல இட்லி



தேவையானவை:
 இட்லி மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கொஞ்சம் கொதிக்கவிடவும் (பாகு வரக்கூடாது). பிறகு மாவில் சேர்க்கவும், பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, மாவுடன் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, இட்லித் தட்டில் மாவை விட்டு, அதன்மீது தேங்காய் துருவலை தூவி வேக வைத்து எடுக்கவும். குழந்தைகளின் மனதைக் கவரும் இட்லி இது.

Offline MysteRy

தேங்காய்  வெஜிடபிள் கொழுக்கட்டை



தேவையானவை:
இட்லி அரிசி - 2 கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியைக் களைந்து  இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இத்துடன் மாவு, தேங்காய் பல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வெந்ததும் ஆறவிட்டு, உருண்டை பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.

Offline MysteRy

நட்ஸ் போளி



தேவையானவை:
மைதா - ஒரு கப், பாதாம் - 10, முந்திரி - 10, அக்ரூட் - சிறிதளவு, பேரீச்சம்பழம் - 6, காய்ந்த திராட்சை - ஒரு சிறிய கப், ஏலக்காய் - 2, பிஸ்தா - சிறிதளவு, சாரைப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - கால் கப், நெய், உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
பாதாம், முந்திரி, அக்ரூட், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, ஏலக்காய் -  பிஸ்தா, சாரை பருப்பு ஆகியவற்றை சுடுநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவில் கேசரி பவுடர், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊறவிடவும். நட்ஸ் கலவையை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரைத்த விழுதை நன்றாக வதக்கி உருண்டைகளாக செய்து வைக்கவும். மைதா மாவை இலையில் தட்டி பூரண உருண்டையை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தவாவில் போட்டு, நெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

Offline MysteRy

வெல்ல அப்பம்



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - முக்கால் கப், துருவிய வெல்லம் - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 கப், துருவிய தேங்காய் - ஒரு கப்.

செய்முறை:
வெல்லத்தை நன்றாக தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கி, வடிகட்டி வைக்கவும். ஆறியதும் கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து வைக்கவும் (விருப்பப்பட்டால், மசித்த வாழைப்பழம் கொஞ்சம் சேர்க்கலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை குழிக் கரண்டியால் எடுத்து ஊற்றவும். அப்பம் நன்றாக 'புஸ்’ என்று வரும். திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

செட் தோசை



தேவையானவை:
பச்சரிசி  - 2 கப், அவல் - முக்கால் கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கடைந்த தயிர் - 2 கப்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, அவல், உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை நன்றாக கழுவி, தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, நைஸாக அரைத்து உப்பு சேர்க்கவும். தவாவை சூடாக்கி, மாவை கொஞ்சம் கனமாக தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். தோசைகளை இரண்டு இரண்டாக பரிமாறவும்.
இது பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். குருமா, சட்னி தொட்டு சாப்பிடலாம்.

Offline MysteRy

மசாலா சப்பாத்தி



தேவையானவை:
சப்பாத்தி - 4, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், துருவிய சீஸ் - அரை கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சப்பாத்தியை சின்ன துண்டுகளாக செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். பிறகு பூண்டு, தக்காளி சேர்த்து சுருள வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். பிறகு, அதனுடன் சப்பாத்தியை சேர்த்து நன்றாக கொத்திவிடவும். கடைசியில் சீஸை சேர்த்து, கொத்தமல்லி தூவி ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு இறக்கவும்.

Offline MysteRy

தேங்காய் சேவை



தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப்,  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் அரிசி மாவுக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீரை எடுத்து கடாயில் விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி அதில் அரிசி மாவை சேர்த்து, கொழுக்கட்டை மாவு பதத்துக்கு வரும் கிளறவும். மாவை சூடாக ஓமப்பொடி அச்சில் போட்டு, இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுத்தால்... சேவை தயார். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் ஆறிய சேவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

வெண்ணெய் புட்டு



தேவையானவை:
புழுங்கலரிசி - 2 கப், வெல்லம் - ஒன்றே கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், முந்திரி - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை எடுத்து கொதிக்க வைத்து, மாவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். வெல்லத்தை பாகு வைத்து (மிகவும் கெட்டியாக இல்லாத பதத்தில்) மாவுடன் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, தேங்காய் துருவலை வறுத்து அதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரையில் கிளறவும். வெண்ணெய் போல் திரண்டு வரும்போது தட்டில் போட்டு துண்டுகளாக்கவும்.

Offline MysteRy

ஆலு டிக்கி



தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், வேர்கடலை பொடி - கால் கப், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீர் விடாமல், குக்கரில் வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். பிறகு, நன்றாக மசித்து அதனுடன் சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து  கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, வேர்க்கடலை பொடியில் புரட்டவும். தவாவில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் நல்ல காம்பினேஷன்.