மற்றவர் மனதுக்குள் நுழைய முயல்பவனே
உன் மனதுக்குள் நீ
நுழைய முயன்றதுண்டா
உன் மனதின்
இருண்ட அறைகளினுள்ளே
பேய்கள் உலாவுவது தெரியும்மா உனக்கு
உன் மனம்
உன் அசிங்கத்தின்
குப்பைகூடையாய் இருக்கிறதல்லவா
உன் மனம்
பயத்தினாலும் கூச்சத்தினாலும்
உன் ரகசிய ஆசைகளை
ஒளித்துவைத்திருக்கும் அந்தரங்க அறையாக இருக்கிறதல்லவா
உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகால விஷமும் வெளிப்படும்
என்பதை நீ அறிவாய் அல்லவா
உன் மனம் ஒரு பருந்து
அது மேலே பறந்தாலும்
கீழே செத்துக் கிடக்கும்
எலிகளை தேடுகிறதல்லவா
உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கரமான அதன் ஆழம்
உனக்கே தெரியாதல்லவா
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனத்தில் இருக்கிறது
அதை யாருக்கும் தெரிவிக்கும்
தைரியம் உனக்கு உண்டா
நம்முடைய முகவரிகள் பொய்யானவை
நமது முகங்களும் பொய்யானவை
நாம் யாரும்
நம்முடைய முகங்களில் இல்லை
சமூகம் என்பது
முகமூடி நடன அரங்கம்
நாம் அனைவரும்
முகங்கள் என்ற முகமூடிகள் அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்