Author Topic: முரண்களின் போராட்டம்  (Read 379 times)

Offline தமிழன்

நீ ஒருவனா
நன்றாக கூர்ந்து பார்
நீ ஒருவனல்ல இருவர்

ஒருவருக்கொருவர் முரணான
இருவர்
ஒளியும் இருளுமான
இருவர்
கோபமும் சாந்தமுமான
இருவர்
உண்மையும் பொய்யுமான
இருவர்

இரவு இல்லையென்றால்
ஒரு நாள்
எப்படி பரிபூரணமாகும்
ஒளியும் இருளும் சேர்ந்தது தானே
ஒரு முழு நாள்
நீயும் அப்படித்தான்

ஒளிக்கும் இருளுக்கும்
ஓயாத போர்
உனக்குள்ளும் நடக்கிறது
அந்தப் போராட்டம்

போராட்டமே
பரிணாமத்தின் பாதை
போராட்டமே
சக்தியின் ஊற்று
போராட்டத்துக்குத் தேவை
இரு முரண்கள்

படைப்புக்குத் தேவை
இரு முரண்கள்
ஆண்மை பெண்மை என
இரண்டு முரண்கள்

எதிலும் உண்டு
அர்த்தநாரிஸ்வரம்
எதிலும் உண்டு
ஆண் பெண் போர்

கூர்ந்து பார்
காதல் என்பதும்
முரண்களின் மோதலே

நேர்முக எதிர்முக
சக்திகளின் மோதலில்
மின்னொளி பிறப்பது போலவே
முரண்களின் மோதலில்
பிறக்கிறது புதிய படைப்புகள்

முரண்களே
உன் பெற்றோர்கள்
அந்த முரண்களின் மோதலில்
நீ வெளிவந்தாய்

வீணையை மீட்டும்
விரல்களைப் போல
போராட்டமே
உன்னை மீட்டுகிறது

போராட்டத்தால் தான்
நீ துருப்பிடிக்காமல் இருக்கிறாய்

போராட்டமே
உன்னை கூர் தீட்டும்
சாணைகல்லாக இருக்கிறது

ஒவ்வொரு போராட்டத்தின் போதும்
நீ புதிதாக பிறக்கிறாய்