Author Topic: ~ 30 வகை பொடிகள்! ~  (Read 1613 times)

Offline MysteRy

~ 30 வகை பொடிகள்! ~
« on: March 28, 2014, 09:41:06 AM »
பருப்புப்பொடி



தேவையானவை:
துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு:
எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #1 on: March 28, 2014, 09:42:39 AM »
பூண்டுப்பொடி



தேவையானவை:
பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு:
பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #2 on: March 28, 2014, 09:45:40 AM »
தேங்காய்ப்பொடி



தேவையானவை:
முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:
இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #3 on: March 28, 2014, 09:47:04 AM »
இட்லி மிளகாய்ப்பொடி



தேவையானவை:
காய்ந்த மிளகாய் - 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:
காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்... இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #4 on: March 28, 2014, 09:48:38 AM »
மிளகு  சீரகப்பொடி



தேவையானவை:
மிளகு, சீரகம் - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு - சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

குறிப்பு:
'சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #5 on: March 28, 2014, 09:50:03 AM »
கூட்டுப்பொடி



தேவையானவை:
கடலைப் பருப்பு, தனியா - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6.

செய்முறை:
வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு:
கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்... சுவை அதிகரிக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #6 on: March 28, 2014, 09:51:29 AM »
ரசப்பொடி



தேவையானவை:
தனியா - 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10.

செய்முறை:
வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்... மணம், ருசி ஆளை அசத்தும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #7 on: March 28, 2014, 09:52:56 AM »
எள்ளுப்பொடி



தேவையானவை:
எள், உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.

குறிப்பு:
புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #8 on: March 28, 2014, 09:54:19 AM »
கறிவேப்பிலை பொடி



தேவையானவை:
கறிவேப்பிலை (ஆய்ந்தது) - 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு:
இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #9 on: March 28, 2014, 09:55:43 AM »
ஆவக்காய் ஊறுகாய் பொடி



தேவையானவை:
காய்ந்த மிளகாய், கடுகு - தலா 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு:
ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #10 on: March 28, 2014, 09:57:06 AM »
அங்காயப் பொடி



தேவையானவை:
சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #11 on: March 28, 2014, 09:58:31 AM »
நாரத்தை இலை பொடி



தேவையானவை:
நாரத்தை இலை - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #12 on: March 28, 2014, 10:00:05 AM »
திடீர் புளியோதரைப்பொடி



தேவையானவை:
புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்... உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #13 on: March 28, 2014, 10:02:40 AM »
வெந்தயப்பொடி



தேவையானவை:
வெந்தயம் - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு:
காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்... உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பொடிகள்! ~
« Reply #14 on: March 28, 2014, 10:05:50 AM »
வேப்பம்பூபொடி



தேவையானவை:
வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து... பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.