இறால்கள் பற்றிய தகவல்கள்:-

இறால் (prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.
கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. எனவே இவற்றை "கடலின் தூய்மையாளர்' என அழைப்பர். பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.