வயது வந்தவர்களே
வாருங்கள்
வயது வந்ததற்காக
அழுவோம்
நம் குழந்தைப் பருவத்தின்
இழவுக்காக அழுவோம்
நமக்குள்ளே நடந்திட்ட
மரணத்திற்காக அழுவோம்
அறிவுக்கனி உண்டதால்
நாம் இழந்திட்ட - அந்த
சொர்கத்திற்காக அழுவோம்
கண்ணீரில் நனைத்து கிழியாத
அந்த சிரிப்புகள்
கவலைத் தீயில் கருகாத
அந்த பூக்காலங்கள்
எங்கே போனது
அறியாப் பருவத்தின்
ஆனந்தம் எங்கே
அறியும் பருவத்தில் நாம்
அறிந்து கொண்டது
பேதங்களையும் பாவங்களயும் தானே
அன்று அரும்புகளாக இருந்தபோது
எங்களிடம் தெய்வீக நறுமணம்
வீசியதே - இன்று
மலர்ந்து நிற்கும் போது
நாற்றம் அல்லவா பரப்புகிறோம்
அப்போது தேவதைகளாக இருந்தோம் - இன்று
காலத்தின் கொடூர செதுக்கலில்
சாத்தான்களாகி விட்டோம்
அப்போது கண்ணாமுச்சில்
ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தோம் - இன்று
வாழ்க்கை ஆட்டத்தில்
நாங்கள் எங்களையே தேடிக்கொண்டிருக்கிறோம்
இறைவா எங்களுக்கு மீண்டும்
அந்த அறியாபருவத்தை கொடுத்திடு
எங்களை சலவை செய்ய
வேதங்களையும் துதர்களையும்
மீண்டும் மீண்டும் அனுப்பும் சிரமம்
உனக்கு இருக்காது