ஒரு நாள்
ஒரு பொழுதினில்
காற்றிடம் தன் வருத்தம் சொல்லி
கடவுளிடம் அனுப்பிவைத்தது
மரங்கள்
வெயிலின் உக்கிரம்
பறவைகளின் இடையுறு
வேர்களுக்கு நீரின்மை
கிளைகளின் மோதல்
இலைகளின் போராட்டம்
இவை அனைத்தும் புகார்களாக
மனுவில் பிரதானமாய்
நிறைந்த கோபத்தோடு
புகார்களுடன் புறப்பட்டது
காற்று
புகார்களுக்கு தீர்வு கிடைக்கும்
என்ற பெருமிதத்துடன்
மரங்கள்
மரங்களின் கட்டளையை
நிறைவேற்றும் கடமை உணர்ச்சியோடு
காடு மலை கடல் கரையென
கடவுளைத் தேடியது
காற்று
நிறைவில் எங்கு தேடியும்
கடவுளை சந்திக்காத
கவலை முகத்தோடு
மரங்களிடம் திரும்பியது
காற்று
சௌகரியமாய் கால்கள் நீட்டி
கைகள் பரப்பி
பெருமூச்சி விட்டபடி
அந்த மரங்களின் நிழலில்
ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார்
கடவுள்