காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.
தமிழனின்
இரத்தமும் கண்ணீரும்
நனைத்த புத்தன்கூட
இன்னும்
போதி மரத்தடியில்தான்.
இலங்கையில்
இருக்கும் புத்தன்
போலியாம்
அது வேறு கதை.
தலைகள்
சிதறும் தருணத்தில்
காணாமல் போன
புத்தன் போல
வெள்ளரசு மரத்தடியில்
காணாமல் போன
தமிழன் வாழ்வு
தொடர்கிறது
மரணத்தோடு
அவர்களோ
சதுரங்க விளையாட்டில்.
மண்ணோடு அல்ல
மரணித்த பின்னும்
வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்
புத்தனைப்போல.
ஆசை பட்ட பின்னல்ல
ஆசைப்பட்டபின் தானே
சித்தார்த்தனும்
புத்தனானான்!!!