உன்னோடு இணை சேர்ந்து
கண்ணார கடல் கண்டு
காலாற கரையில் நடந்து
கடற்கரை ரசித்திட ஆசைதான் ...
உன் கணுக்கால் தீண்டிய
கடலலைகள்
நின் காலழகில் சிக்கி
கண் சொக்கி திக்குமுக்காடி
திரும்ப கடல் செல்ல மறுத்துவிட்டால் ?
நின்னை இசைபாடிட வேண்டிய
வரலாறு, நின்னை வசை பாடுமே ...
என்னால் ஏன் உனக்கிந்த
நிலையென்றே...
நின் காதலில் சிக்குண்ட பின்
அவ்வாசையையே ஒதுக்கி
புறந்தள்ளிவிட்டேன்..
ஆசைகொண்ட என் மனதிற்கு
கசையடி கொடுத்து
சிந்திடும் கண்ணீர் துளிகளது
வெளிதெரியாதபடி
பசைபோட்டு ஒட்டி ,
இசைந்தேவிட்டேன்
உன்னோடு இணையாய்
கடல்காண கூடாதென்று
உணர்வுகளற்ற கடல் அலைக்கே
கருணைக்காட்டியவன்
என் உணர்வுகளுக்கெலாம்
உரித்தவள் உன்னையா மறந்திடுவேன் ?
உனக்காகவே வரம் வாங்கிவந்து
வடிக்கப்பட்டிருக்கும் வரிகள்
உன்னால் ரசிக்கப்பட்டாலே போதும் .