1.2. நாட்டுப்படலம்
21   தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ
லிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர்
கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட.    1.2.1
22   வேறு
அகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து
மிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக்
ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச்
சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி.    1.2.2
23   அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய்
முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்த
கதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே
யுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே.    1.2.3
24   பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக்
கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க
மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே
சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும்.    1.2.4
25   தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு
மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு
முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா
நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும்.    1.2.5
26   வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி
கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி
நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை
தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும்.    1.2.6
27   விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக்
கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தே
யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி
நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம்.    1.2.7
28   வேறு
வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு
    மனையையுந் தினையையும் வாரிப்
    புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்
    பொடிபடத் துறுகலின் மோதி
    விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி
    விளைந்தமுக் கனிசத கோடி
    சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத்
    தடவரை யருவிகொண் டிறங்கும்.    1.2.8
29   மலையெனு மரசன் புயங்களைத் தழுவி
    மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த
    நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு
    நித்தில ராசியுங் கவர்ந்து
    தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச்
    சுருட்டியே யெல்லைவிட் டகலும்
    விலைமகள் போன்று பலபல முகமாய்
    வெள்ளரு வித்திரள் சாயும்.    1.2.9
30   வேறு
தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி
வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக்
காது மாகளி றெனநதி கழைக்கடங் காது
மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும்.    1.2.10
31   பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி
விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச்
சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப்
பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும்.    1.2.11
32   கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ
டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக்
கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற
நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே.    1.2.12
33   வேறு
இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே
    யெரிதழற் பாலையிற் புகுந்து
    மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா
    யெயிற்றியர் வயிறலைத் தேங்கக்
    கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும்
    வேடர்தங் கணத்தொடும் வெருட்டி
    முத்தணி சிறப்ப விருகரை கொழித்து
    முல்லையிற் புகுந்தது சலிலம்.    1.2.13
34   பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்
    பட்டியுங் குட்டியுஞ் சிதறிச்
    சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ்
    சுரிகுழற் றொறுவிய ருடுத்த
    கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங்
    கொண்டெடுத் தவர்நிரை சாய்த்து
    வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து
    மருதத்திற் பரந்தன வெள்ளம்.    1.2.14
35   வேறு
கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத்
தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி
யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத்
துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம்.    1.2.15
36   அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத்
தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங்
கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய்
நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும்.    1.2.16
37   தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக்
கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங்
குடம்பை யின்பல பேதமா கியசத கோடி
யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும்.    1.2.17
38   வேறு
ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே
    யிடிபட வணையினை முறித்துச்
    சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து
    செழுங்கருப் பாலையைச் சாய்த்து
    வேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கி
    விரிதலை யரம்பையைத் தள்ளி
    வாரியிற் செறித்து பணையெலா நிரப்பி
    மட்டிலா மலிந்தன வனமே.    1.2.18
39   வேறு
அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங்
கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு
மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ்
சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும்.    1.2.19
40   முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க
நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச்
செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு
மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே.    1.2.20
41   மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர்
கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள்
வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு
கட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே.    1.2.21
42   வேறு
தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன்
    சிதைந்திடக் கமடமுள் ளழுந்த
    வரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின்
    வயிற்றிடை கொழுமுகந் தாக்கி
    விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப
    வெருண்மதக் கவையடிப் பேழ்வாய்
    நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கி
    நீள்வய லெங்கணு முழுதார்.    1.2.22
43   முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமல
    முகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக்
    கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக்
    கடிமலர்க் குமுதமு மடிய
    மள்ளர்கார் சேற்றி லிடறிய பதும
    மணியின மலரளி யெழுப்ப
    வெள்ளநீர் பரப்பு கழனிக டோறு
    மென்கருஞ் சேறுசெய் தனரே.    1.2.23
44   சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே
    ழிசையளி தொகுதியிற் கூடி
    மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து
    வாய்விட முழங்கிய வோதை
    கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர்
    குடியொடு மடிந்தன வினிமே
    லந்தர மலது வேறிட மிலையென்
    றழுகுரன் மயங்குவ போலும்.    1.2.24
45   சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச்
    சுருதிசெய் பன்மலர் சிறந்த
    விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த
    வெருமையின் கவையடிப் பரூஉத்தா
    ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள
    நீணிலா வெறிப்பது நிறைந்த
    கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு
    கவ்விய கதிர்மதி போலும்.    1.2.25
46   கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து
    கதிரவன் றனைக்கையாற் றொழுது
    குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து
    குழுவுட னுழுநர்கள் கூண்டு
    நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
    நென்முளை சிதறிய தோற்றம்
    பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
    பொன்மழை பொழிவது போலும்.    1.2.26
47   படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற்
    பருமுலைக் கண்டிறந் தொழுகி
    நடைவழி சொரியு மமுதமும் வாழை
    நறுங்கனி யுகுத்தசெந் தேனு
    முடைபடு பனசப் பசுங்கனிச் சுளையி
    லூற்றிருந் தோடிய தேனுங்
    கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக்
    கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும்.    1.2.27
48   அருமறை நெறியும் வணக்கமுங் கொடையு
    மன்புமா தரவுநல் லறிவுந்
    தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந்
    தயவுஞ்சீ ரொழுக்கமு முடையோர்
    பெருகிய செல்வக் குடியொடு கிளையும்
    பெருத்தினி திருந்துவாழ் வனபோன்
    மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி
    வளர்ந்தது நெல்லிலை நாற்றே.    1.2.28
49   கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக்
    குவித்திடு முடியிட மடுத்துக்
    தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற்
    சிற்றிடைக் கடைசியர் வாரிப்
    பூதர மனைய சுணங்கணி முலையிற்
    புள்ளியிற் சேதகம் போர்ப்ப
    வாதரம் பெருகி நிரைநிரை வடிவா
    யணியணி நாற்றினை நடுவார்.    1.2.29
50   கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்
    கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச்
    செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு
    தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி
    துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந்
    தொடுகடன் முகட்டிடை யெழுந்து
    வையகஞ் சிறப்ப வருமுழு மதியு
    மறுவுமொத் திருந்தன மாதோ.    1.2.30
51   பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப்
    பைங்கழை நிகர்த்ததோ ளசைய
    வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட்
    டள்ளலஞ் சேற்றிடை நடுவோர்
    சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற்
    சேதகந் தெறிப்பது திரண்ட
    வனசமென் முகையிற் பொறிவரி யறுகால்
    வண்டுமொய்த் திருப்பது போலும்.    1.2.31
52   முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய
    முகிறவழ் கருங்குழ னெகிழச்
    சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச்
    சேற்றிடை நாற்றினை நடுவோர்
    பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம்
    பசியநெற் பயிரொளி பாய
    மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு
    மரகதக் கடகமொத் திருந்த.    1.2.32
53   வெறிமது வருந்தி மரகதக் கோவை
    மென்பிடர் கிடந்துருண் டசையக்
    கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக்
    கடைசியர் களிப்பொடு தவளச்
    சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற்
    செழுமலர்க் கைவிரற் குவித்துக்
    குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க்
    குடவளைக் குரவையோ டிகலும்.    1.2.33
54   கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங்
    குடமுலைக் கடைசியர் செழுங்கைக்
    காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங்
    கடைந்திணைக் கியகணைக் காற்குஞ்
    சேந்திணை பொருவா தினமென வெருவிச்
    செங்கயல் வரிவராற் கௌிறு
    பாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப்
    பங்கமெய் படப்பயப் படுமே.    1.2.34
55   குருகின மிரியப் புள்ளினம் பதறக்
    கொக்கினம் வெருவிட வெகினம்
    விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல
    மென்சிறைப் பேட்டனந் துடிப்பச்
    சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச்
    சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி
    வரிவராற் பகடு வளைநில வெறிக்கு
    மடைத்தலைக் கிடந்துமூச் செறியும்.    1.2.35
56   வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி
    வளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப்
    பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்து
    பிடர்குனி தரக்குலை சேந்து
    சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்
    சுடர்மணி முத்தினந் தெறிப்பத்
    தரையினிற் படிந்தே யருட்கை சுரந்த
    தருவினம் வெருவிடக் கிடக்கும்.    1.2.36
57   கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக்
    குடமதுக் கைமடுத் தருந்தி
    மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட
    மள்ளர்கள் வனப்பினுக் குடைந்த
    சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த
    செயலெனப் பிள்ளைவெண் பிறைவாட்
    கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து
    கதிரரிந் தரிநிரை யிடுவார்.    1.2.37
58   திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித்
    திரைசெய்து சும்மையிற் சேர்த்துக்
    கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட்
    கடைசியர் குழாத்தொடுந் திரண்டு
    விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த
    விசித்திறுக் கியசுமை யேந்திப்
    பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப்
    புலியடிக் குலைத்தலை சாய்க்கும்.    1.2.38
59   அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ
    ளணிவட மார்பிடைப் புரளப்
    பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட
    கடைசியர் சுமையெலாம் பரப்பி
    யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க
    ளெங்கணு மிலங்கிய தோற்றம்
    விசும்பினைத் தடவ வரைசத கோடி
    வீற்றிருந் தனவெனச் சிறக்கும்.    1.2.39
60   கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த
    கருங்கடா வினம்பல விணைத்துப்
    போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப்
    பொன்னிறச் செந்நெல்லைக் குவித்துச்
    சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித்
    திரண்மனை வயின்வயின் செறிப்பா
    ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு
    மறைதிரைக் கடலினைப் பொருவும்.    1.2.40
61   செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந்
    திசைதொறு மலிந்தன செருக்குங்
    கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த
    களமர்க ளொலிகுரற் செருக்குந்
    துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய்
    சுமப்பவர் கம்பலைச் செருக்கு
    மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்
    வளமனைச் செருக்குமொத் திருக்கும்.    1.2.41
62   வேறு
கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக்
கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ்
சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல
வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும்.    1.2.42
63   அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார்
நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர
விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித்
தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும்.    1.2.43
64   நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை
விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு
துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த்
திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த.    1.2.44
65   நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச்
சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற
மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப்
பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த.    1.2.45
66   தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்பு
பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை
சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி
யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும்.    1.2.46
67   வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத்
தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ்
சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த
கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும்.    1.2.47
68   திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச்
சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில்
விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்
பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும்.    1.2.48
69   மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை
யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப்
பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச்
செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள்.    1.2.49
70   கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற்
சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின்
விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து
பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும்.    1.2.50
71   பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக்
கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும்
படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத்
துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும்.    1.2.51
72   தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே
னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச்
சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி
வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும்.    1.2.52
73   கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத்
துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு
முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி
வெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும்.    1.2.53
74   ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ்
சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியு
மாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு
நீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும்.    1.2.54
75   தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப்
பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலே
மரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற்
றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே.    1.2.55
76   வேறு
நினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்
    நிந்தனை சிந்தனை யிலையே
    யினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்து
    மிவையலான் மதுப்பிறி திலையே
    சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி
    திருத்தும்பொய் யலதுபொய் யிலையே
    வனக்கனி கறுத்த குலைக்கள வலது
    மறுத்தொரு கொலைக்கள விலையே.    1.2.56