இரக்கம்
செல்வந்தரின் ஒரே மகளாக பிறந்த சேனாவிற்க்கு அழகும் அறிவும் தயாள குணமும் மிகுந்து காணப்பட்டது, பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிரபல கல்லூரியில் சேர்ந்து முதுகலை பட்டபடிப்பில் இறுதியாண்டில் படித்துவந்தாள், தினமும் கல்லூரிக்கு காரில் வந்திறங்கும் சேனாவிற்க்கு கல்லூரியின் வாசலில் உட்கார்ந்திருக்கும் அந்த பிச்சைக்காரன் கண்களில் பட தவறுவதே இல்லை, சில நாட்கள் காலை நேரத்தில் கல்லூரிக்கு போகும் அவசரத்தில் அவனை கவனிப்பதற்கு மறந்து போனாலும் மாலை கல்லூரியை விட்டு திரும்பும் சமயங்களில் தவறாமல் அவனை பார்த்து ஐம்பது நூறு என்று அவனது கையில் பணத்தை கொடுத்துவிட்டு அவனை பரிவுடன் சாப்பிட்டாயா என்று விசாரிக்கும் வழக்கம் உண்டு,
சேனாவின் தோழி சுஜாவிற்கு அவளது தோழியின் உதார குணம் சிறிதும் பிடிக்கவே இல்லை. அன்றைக்கும் இருவரும் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வழியில் கிழிந்த அழுக்கு நிறைந்த ஆடையுடன் பதினாறு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி கையில் ஒரு பாத்திரத்துடனும் பிச்சை எடுப்பதற்கு சுவர் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள், அது நாள் வரையில் அந்த பிச்சைக்காரப்பெண்ணை அந்த இடத்தில் பார்த்திராத சேனா அவளிடம் சென்று பணத்தை கொடுத்துவிட்டு எப்போதும் பிச்சையிடும் அந்த பிச்சைக்காரனை கவனியாதவள் போல் சென்றுவிட்டாள்.
அடுத்த சில நாட்கள் அந்த பிச்சைக்காரன் எப்போதும் உட்கார்ந்திருக்குமிடத்தில் காணவில்லை, அதற்க்கு பதிலாக அந்த பெண் அங்கே சுற்றி வந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவன் எங்கே காணவில்லை என்று கேட்ட போது அவள் ஒன்றும் விளங்காதவளைப்போல சேனாவிற்க்கு பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
இவ்வாறு தினமும் தொடர்ந்தது சேனாவின் உதாரகுணம், பிச்சைக்காரப் பெண் வந்ததிலிருந்து சில நாட்கள் பிச்சைகாரனுக்கு பிச்சை போடுவதை சேனா விட்டுவிடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது. அன்றைக்கு சேனா தனது பணப்பையை எடுத்துவற மறந்து போனதால் அவளுடைய தோழி சுஜா எடுத்து வந்திருந்த பணத்திலிருந்து வாங்கி பிச்சைக்காரப் பெண்ணிற்கு கொடுத்துவிட்டு பிச்சைக்காரனுக்கு கொடுக்காமல் சென்று விட்டாள் சேனா,
சுஜாவிற்கு சில வினாடிகள் அங்கே என்ன நடந்தது என்பது நினைவிற்கு வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டிருந்தது, ரத்த வெள்ளத்தில் சேனா. சேனா சுஜாவின் கையிலிருந்த பணத்தை வாங்கி பிச்சைக்கார பெண்ணிற்கு கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் அங்கே சிறிது தூரத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் வேகமாய் ஓடி வந்து கையில் தயாராக வைத்திருந்த இரும்பு தடி ஒன்றை சேனாவின் தலையில் ஓங்கி அடித்தான், சேனாவின் மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்தது, மயங்கி கீழே விழுந்த சேனாவை மறுபடியும் இரும்பால் தாக்க முயன்றான் அதற்குள் அருகிலிருந்தவர்களும் கல்லூரியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களும் அவன் கையிலிருந்த இரும்புத் தடியை பிடுங்கி அவனை இறுக பிடித்துக் கொண்டனர், கல்லூரியின் வாயிலில் நின்றிருந்த காவலர்கள் ஓடிவந்து அவனை பிடித்துச்சென்று போலீசிற்கு போன் செய்து போலீஸ் வந்ததும் பிச்சைக்காரனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேனா நினைவுத் திரும்பாமலேயே சில வாரங்களில் இறந்து போனாள். அந்த பிச்சைக்காரனை விசாரித்த போலீசிடம் பிச்சைக்காரன் சொன்ன ஒரே காரணம் 'அவள் வேறொருவர் மீது இரக்கப்படுவது எனக்கு பிடிக்கவில்லை'.