பெண்ணே
உன் நீதிமன்றத்தில்
நாங்கள் குற்றவாளிகளே
ஒப்புக்கொள்கிறோம்
நாமே நீ இட்ட பிச்சைதான்
ஆனால் உன்னை
எங்கள் வாசலில் கையேந்தும்
பிச்சைக்காரி ஆக்கினோம்
நீ எங்களுக்கு சிறகாய் இருந்தாய்
நாம் உனக்கு கூண்டாய் இருந்தோம்
எங்கள் வெற்றிக்குப் பின்னல்
நீ இருந்தாய்
உன் தோல்விக்குப் பின்னால்
நாங்கள் இருந்தோம்
எங்களை பெருவிப்பவள் நீ
எங்களால் இழப்பவளும் நீ தான்
நீ உன்னை விற்றால்
அது விபச்சாரம்
நாங்கள் எங்களை விற்றால்
அது திருமணம்
காதல் கூட
நாம் உனக்கு விரிக்கும்
வலை தான்
தாலி கூட
நாம் உனக்கு பூட்டும்
விலங்கு தான்
அம்மா சகோதரி
காதலி மனைவி
மகள் வைப்பாட்டி என்று
எங்கள் விளையாட்டிகாக
உருவாகிய பொம்மைகள் நீங்கள்
அவதாரங்களையும் தீர்க்கதரிசிகளையும்
பெறுகிறவள் நீ
நாமோ உன்னை
பாவத்தின் பிறப்பிடம் என்றோம்
உன்னை அணைப்பதாக நினைத்துக்கொண்டு
இருண்டு போனவர்கள் நாம்
இதோ உன்முன்னால்
குற்ற உணர்ச்சியுடன்
தலைகுனிந்து நிற்கின்றோம்
உன் பெண்மையெனும்
தெய்வீக நெருப்பில்
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக