தொலைதூரம் இருக்கின்றாய்
இருந்தும், அலையலையாய்
படர்ந்து ,பின்தொடர்ந்து
கரைமணல் நனைத்திடும்
கடலலைகள் போல
என் சிறுமனம் நனைத்திடும்
நின் நினைவலைகள்.
நிறை நினைவுகளாய்
நெஞ்சம் நிறைந்திருந்ததனால்
சுவாசக்காற்றிற்கே
வேற்று மாற்றாக
நேற்றே , நிலைநாட்டி
நிர்ணயித்து விட்டேன் .
நின் நினைவுகளை
நின் நிறை நினைவுகள்
நிரப்பமாய்
நிறைந்தபடி என் சிறுமனதினில்
நிதர்சனக்காதல் கொண்டமையால்
என் மனம் கருத்தரித்து
ஈன்ற கவிதை மகவுகள்
எத்தனை ஆயிரம்
அத்தனையும் பாயிரம்
ஒவ்வொரு கவிதையும்
காலமுள்ள காலம் வரை
காதல் உள்ள காலம் வரையும்
நிலைத்திருக்கும் .
நம் நிதர்சன காதலினால்
கருவாகி உருவான
ஒவ்வொரு கவிதைக்குழந்தையும்
செம்மையாய் வளமையாய்
பொத்திபொத்தி பாதுகாப்போடு
பிரசவித்து பத்திரப்படுத்துவதில்
யான் பெறும் அரும்பெரும் பேறு அறிவீரோ ?
பிள்ளைபேறே
இனி இல்லை என்றாகிவிட்ட
அன்பர்களுக்கெலாமென
பார்த்து பார்த்து
பிரத்யோகமாய்
பிரசவித்து பெற்றெடுத்த
ஓர் பரவசமும், பூரிப்பும்
பிரிதோர் அறிந்திடார் ..
காலமும்கூட
காலகாலமாய்
கதைகளாய்,
காவியமாய்,
காட்சிகளாய்
கலப்படமான காதலை
கட்டாயக்கல்வியாய்
கற்பித்து வந்த
காலகட்டத்தினில்
கறந்த பாலின் சுத்தத்தையொத்தது
காதலென்றும்
கன்னிப்பெண்களுக்கு கற்பு எப்படியோ
அத்தனை கண்ணியமும் களங்கமுமற்றது காதல்
என்பதை கண்களால் காணாதபோதும்
கணக்கச்சிதமாய் கற்பித்தது
நின் காதல் நினைவுகள் ......