Author Topic: ~ 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி! ~  (Read 1980 times)

Offline MysteRy

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி



தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.

குறிப்பு: 
வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.

Offline MysteRy

வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை



தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் - 2, வெண்டைக்காய் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபட்டதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை புளிக்கவிடவும். பிறகு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு கரண்டி மாவை விட்டு, தேவைப்பட்டால் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரித்து சுட்டெடுத்தால்... வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை தாயார். இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை.

குறிப்பு: 
இது, மூளை நன்கு வேலை செய்ய உதவுவதுடன், பெரியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும்.

Offline MysteRy

வெண்டைக்காய் ஃப்ரை



தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு - 6 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், அரிசி மாவு, மைதா மாவு - தலா 2 டீஸ்பூன்,  சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 வெண்டைக்காயை நடுத்தரமான அளவில் நறுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுடன் வெண்டைக்காயை சேர்த்து, சிறிதளவு நீர் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, 4 டீஸ்பூன் சூடான எண்ணெயை வெண்டைக்காய் கலவையில் விட்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவையை காயும் எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: 
 குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இது, அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க வைக்கும்.

Offline MysteRy

கறிவேப்பிலை பொடி



தேவையானவை:
உருவிய கறிவேப்பிலை - 2 கப், எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
 கறிவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம்போக நிழலில் உலரவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலையை  மொறுமொறுப்பாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். பிறகு, இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நைஸாகப் பொடிக்கவும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்தப் பொடி, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்றது.

குறிப்பு: 
கறிவேப்பிலை, தலைமுடியின் கருமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.

Offline MysteRy

புதினா  கொத்தமல்லி துவையல்



தேவையானவை:
புதினா தழை, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாகப் பொடிக்கவும். மீதியுள்ள எண்ணெயில் புதினா, கொத்தமல்லியை லேசான தீயில் வதக்கவும். கொரகொரப்பாக அரைத்த பொடியை தேங்காயுடன் சேர்த்து... வதக்கிய புதினா, கொத்தமல்லி மற் றும் புளி சேர்த்து நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: 
இது பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும், ஈறுகளின் உறுதிக்கும் உதவும்.

Offline MysteRy

பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு



தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - 50 கிராம், சாம்பார் பொடி- 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: வெங்காய வடகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.
அரைக்க: துருவிய தேங்காய் - கால் கப், சீரகம் - ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:
பொன்னாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும். அரை டம்ளர் நீரில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், கீரை சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்பை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும். இதனை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் உபயோகிக்கலாம்.

குறிப்பு: 
பொன்னாங்கண்ணிக் கீரை, கண் பார்வைக்கும், உடல் பளபளப்புக்கும் உறுதுணை புரியும்.

Offline MysteRy

அகத்திக்கீரை தண்ணிச் சாறு



தேவையானவை:
நறுக்கிய அகத்திக்கீரை - 2 கப், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் ஒரு கப் நீர் விட்டு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, அகத்திக்கீரையையும் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், மிளகுத்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: 
உடலின் குளிர்ச்சித் தன்மையை தக்க வைக்கும். இதனை தினமும் ஒரு கப் வீதம் 4 நாட்கள் அருந்தினால், வாய்ப்புண் குணமாகும்.

Offline MysteRy

பூண்டு  மணத்தக்காளி குழம்பு



தேவையானவை:
உரித்த பூண்டு - அரை கப், மணத்தக்காளி வற்றல் - 6 டீஸ்பூன், வெல்லம், புளி - சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும். பூண்டு பாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: 
இந்தக் குழம்பை இளம் தாய்மார்கள் (பிரசவித்த பெண்கள்) சாப்பிட... தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். மேலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால்... கட்டுப்பாட்டுக் குள் வரும்.

Offline MysteRy

தேங்காய்ப் பால் ஆப்பம்



தேவையானவை:
புழுங்கலரிசி - ஒன்றரை கப், பச்சரிசி - அரை கப், ஜவ்வரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை உளுந்து - 4 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 கப், மீடியமான தேங்காய் - ஒன்று, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் நைஸாக, கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். தேங்காயைத் துருவி நைஸாக அரைத்து, மூன்று முறை பால் எடுத்து, மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கவும். வெல்லத்தை அரைத்த மாவில் சேர்த்து தோசை மாவு பதத்துக்குத் தயார் செய்யவும்.
தவாவை அடுப்பில் வைத்து ஒன்றரை கரண்டி மாவை தோசை போல ஊற்றி, ஓரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். 2 நிமிடத்தில் வெந்துவிடும். திருப்பிப் போடக் கூடாது. வெந்த ஆப்பத்தை எடுத்து அதன் மேலே இரண்டு கரண்டி தேங்காய்ப் பாலை விட்டுச் சாப்பிடக் கொடுக்கவும்.

குறிப்பு: 
தேங்காய்பால் வயிற்றுப் புண்ணை குணமாக்கும்...  வயிற்றுப் பூச்சிகளைக்கூட ஒழிக்கும்.

Offline MysteRy

முட்டைகோஸ்  கேரட் பொரியல்



தேவையானவை:
முட்டைகோஸ் - 250 கிராம், கேரட் - 50 கிராம், பயத்தம் பருப்பு - ஒரு கரண்டி, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பயத்தம்பருப்பை உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து தாளித்து... நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து வதக்கி... சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, துருவிய கேரட், மஞ்சள்தூளை முட்டைகோஸில் சேர்த்து வதக்கி, தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: 
இந்தப் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட... குடற்புண் குணமாகும்.

Offline MysteRy

கருணைக்கிழங்கு குருமா



தேவையானவை:
கருணைக்கிழங்கு - 200 கிராம், கேரட் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 3 பல், சாம் பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், சிறிய தக் காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோம்பு, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 4.

செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, சுத்தம் செய்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட் டையும் அதேபோல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும். அரைக்கக் கொடுத் துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு காய்கள் குழைந்துவிடாமல் வேக வைக்கவும். வெந்து கொண்டிருக்கும் கலவையில், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கலாம்.

குறிப்பு: 
மூலநோய் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

Offline MysteRy

கருணைக்கிழங்கு அல்வா



தேவையானவை:
கருணைக்கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், நெய் - 50 கிராம், பால் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு - 6, அல்வா பவுடர் (கடைகளில் கிடைக்கும்) - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இதனை பச்சை வாசனை போக நெய்யில் வதக்கி, பாலில் வேகவிட்டு, சர்க்கரை சேர்க்கவும், பிறகு, ஏலக்காய்த்தூள், அல்வா பவுடர் சேர்த்து... சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், நெய்யின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

சுண்டைக்காய் பிரியாணி



தேவையானவை:
பாசுமதி அரிசி,  பிஞ்சு சுண்டைக்காய் - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 5 பல், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை (சேர்த்து) - அரை கப், தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
வறுத்துப் பொடிக்க: பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்ந்து - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ள வும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி... வறுத் துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால் சுண்டைக்காயை இரண்டாகவும் நறுக்கி வதக்கி, வேக வைக்கலாம். வயிற்றுப்பூச்சி மற்றும் குடற்பூச்சிகளை ஒழிக்கும் குணம் சுண்டைக்காயிடம் உண்டு.

Offline MysteRy

சுண்டைக்காய்  நெல்லிக்காய் வதக்கல்



தேவையானவை:
பெரிய நெல்லிக் காய் - 8, பிஞ்சு சுண்டைக்காய் - அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன். 
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிள காய் - 3, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:
அரை டீஸ்பூன் எண் ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நெல்லிக்காய்களை வதக்கவும் (8 நிமிடத்தில் வதங்கிவிடும்). சூடு ஆறியதும் விதைகளை நீக்கி, ஒவ் வொரு நெல்லிக்காயையும் எட்டாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இத னுடன் உப்பு, மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் சேர்க்கவும். பிறகு, வறுத்துப் பொடித்து வைத்ததை சேர்த்து, நெல்லிக்காய், பெருங் காயத்தூள், சேர்த்து, நல்லெண் ணையை விட்டு கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:
இது, ஞாபகசக்தி பெருக மிகவும் பயன்படும்.

Offline MysteRy

பீட்ரூட் அசோகா அல்வா



தேவையானவை:
பீட்ரூட் - ஒரு கிலோ, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள், - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, கோவா - 100 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம், கோதுமை மாவு - 5 டீஸ்பூன்.

செய்முறை:
பீட்ரூட்டைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ள வும். இதனை 50 கிராம் நெய்யில் சுருள வதக்கி, ஒரு டம்ளர் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குழைவாக வேகவிடவும். கோதுமை மாவையும் வெறும் வாணலியில் வறுத்து பயத்தம்பருப்பில் சேர்த்து வேகவிடவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து, கோவாவை உதிர்த்துப் போடவும். இடை இடையே நெய் சேர்க்கவும். வேக வைத்த பீட்ரூட்டை இதில் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி னால்... பீட்ரூட் அசோகா அல்வா தயார்.

குறிப்பு:
ரத்தசோகை குணமாகவும், ரத்தம் விருத்தி அடையவும் பீட்ரூட் மிகவும் உதவும்.