Author Topic: ~ இரவு உணவு: ஸ்டஃப்டு சப்பாத்தி!தயிர் பச்சடி!! ~  (Read 395 times)

Offline MysteRy

இரவு உணவு: ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை:
கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு (எல்லாம் சேர்த்து) - கால் கிலோ, கோதுமை மாவு - 2 டம்ளர், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவில்... தேவையான தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைந்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, சிறுசிறு உருண்டைகளாக பிரித்து வையுங்கள். மறுபுறம் காய்கறிகளை எல்லாம் கழுவி, சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்கறிகளை வதக்கி... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி, காய்கறி மசாலா செய்து கொள்ளுங்கள்.
மாவு உருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து உருட்டி, அகல்விளக்கு போல குழியாக்கிக் கொள்ளுங்கள். வேக வைத்த காய்கறி மசாலாவை, மாவுக்குள் வைத்து மூடி, லேசாக கையால் தட்டையாக்கிக் கொள்ளுங்கள். வாய் அகன்ற, பிளேடு போன்ற ஓரங்கள் உள்ள சிறிய பாத்திரத்தை (எவர்சில்வர் டிபன் பாக்ஸ்) மாவின் மேல் வைத்து அழுத்தினால்... ஓரங்கள் துண்டாகி வட்டமான சப்பாத்தி கிடைக்கும் (ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும் மசாலா வெளியில் வராமல் இருப்பதற்காகவே இப்படி செய்கிறோம்). சப்பாத்திக் கல்லில் வைத்து மெதுவாக உருட்டி, அடுப்பில் தவாவை சூடாக்கி, டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்தியை இருபுறமும் வேகவைத்து எடுங்கள்.
இதற்கு தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.


தயிர் பச்சடி

தேவையானவை:
கெட்டித் தயிர் - தேவையான அளவு, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் -  2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கி, உலர்ந்த துணியில் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இனி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை தயிரில் சேர்த்து நன்கு கலந்துவிட்டால்... அருமையான தயிர் பச்சடி ரெடி.