4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:
மேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.
நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.
இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும்.
படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.