Author Topic: ~ இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து! உங்கள் தட்டில் உணவா... விஷமா? ~  (Read 642 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து! உங்கள் தட்டில் உணவா... விஷமா?




உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்’. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்’ என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் அஸ்பார்டேம் (Aspartame).
இந்த 'அஸ்பார்டேம்’ சாக்ரினைவிட மிகவும் கெடுதலான பொருள் என்று உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அசைக்க முடியாத மாபெரும் ராட்சத சக்தியாக 'அஸ்பார்டேம்’ வேரூன்றிவிட்டது. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளை உங்களுக்குச் சொல்லவேண்டியது என் தார்மிகக் கடமை.
1971-ம் ஆண்டு 'ஸியர்லி’ என்கிற பிரபல மருந்து கம்பெனியின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகளை சோதனை செய்து கொண்டிருந்தார். தற்செயலாக அவரின் விரலில் பட்ட வெள்ளை நிற பவுடரை சுவைத்தார். சீனியைவிட 500 பங்கு இனிப் பாக இருந்த அந்த பவுடர்தான் 'அஸ்பார்டேம்’. அன்று முதல் 'ஸியர்லி’ கம்பெனிக்கு அடித்தது யோகம்! 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. (FDA-Food and Drug Administration) இதற்கு அனுமதி அளித்தது. அதற்குள், 'அஸ்பார்டேம் கெடுதலை உண்டு பண்ணலாம்’ என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநலப் பேராசிரியர் டாக்டர் ஓல்னி அஸ்பார்டேமுக்கு எதிராக தனி மனித போராட்டத்தையே தொடங்கினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து, 'மனிதர்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம்’ என்ற கருத்துக்களை முன் வைத்தார். உடனே (1975) அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது எஃப்.டி.ஏ. அதுவரை பணமழையில் நனைந்து வந்த 'ஸியர்லி’ கம்பெனி சும்மா இருக்குமா..? 'அஸ்பார்டேம் மிகவும் பாதுகாப்பானது’ என கிட்டத்தட்ட 200 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.
ஒரு விஷயத்தை 'கெட்டது’ என்று சொல்வதற்கும்... அதே விஷயத்தை 'நல்லது' என்று சொல்வதற்கும் இந்த டாக்டர்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்களே... என்று உங்களுக்கு ஆச்சர்யமாக / அதிர்ச்சியாக இருக்கிறதா? சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால், எந்த மாதிரி ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிட முடியும் என்கிற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். 'ஒருவன் கொலைகாரன்’ என்று சொல்வதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்கள். 'அவனே நிரபராதி’ என்று வாதிடுவதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்களே, அதுபோலத்தான்.
'ஸியர்லி கம்பெனி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோடிக்கப்பட்ட பொய்’ என்று டாக்டர் ஓல்னி வாதிட்டார். இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணை கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் (பிறகு இவர், ஸியர்லி கம் பெனியின் சட்ட ஆலோசகராகச் சேர்ந்து கொண்டது தனிக்கதை).
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரீகன், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஹேஸ் என்பவரை எஃப்.டி.ஏ-வின் புதிய தலைவராக நியமித்தார். அதே சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அடுத்த வருஷமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸியர்லி கம்பெனியிலேயே சேர்ந்தார் ஹேஸ். க்ளைமாக்ஸாக 1985-ம் ஆண்டு ஸியர்லி கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது... 'மான்சான்டோ’.
முந்தைய சாக்ரினை உற்பத்தி செய்தது, இந்த மான்சான்டோ நிறுவனம்தான். பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடை செய்து விட்ட டிடிடீ (DDT) உற்பத்தி செய்பவர்களும் இவர்கள்தான்.
தற்போது, உலகளவில் முக்கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்வது மான்சான்டோ. மீதி கால்பங்கு உற்பத்தி செய்வது யார் தெரியுமா... அஜினோமோட்டோ! உலகெங்கிலும் உள்ள சமையல் அறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் 'மானோசோடியம் குளுடாமேட்’ (MSG) என்கிற வேதிப்பொருள் கலந்த அஜினாமோட்டோவை உற்பத்தி செய்பவர்கள்தான் இவர்கள். இந்த இரண்டு பேரின் பிடியில் சிக்கியுள்ள அஸ்பார்டேம், நீங்கள் அன்றாடம் பருகும் காபி, டீயில் தவறாமல் இடம் பிடித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?