தேனீ - விஷப்பூச்சிகளின் கடிக்கு-பாட்டி வைத்தியம்:-
1. கொட்டினவுடன், ஒரு கயிறு, கந்தல் துணி எது கிடைக்குமோ அதைக் கொண்டு கொட்டின இடத்துக்குச் சற்றுமேல் இறுகக் கட்டி ரத்த ஓட்டம் இல்லாமல் செய்ய வேண்டும். விஷம் மேலே ஏறி நெறி கட்டுவதற்கு முன்னால் இதைச் செய்ய வேண்டும். விஷம் மேலே ஏறிவிட்டால் கட்டுவதில் பயன் இல்லை.
2. எலுமிச்சம்பழத்தை அறுத்து, அதன் சாற்றைக் கடித்த இடத்தில் வைத்துத் தேய்க்க வேண்டும்.
3. நவாச்சார ஆவியை (Smelling salt) மூக்கில் வைத்து இழுத்து மோந்துவிட்டு, கொட்டின கையை நன்றாக உதறி வீசி, இரண்டொரு நிமிஷம் சுழற்ற வேண்டும். நவாச்சார ஆவி அடைத்த சீசாக்கள் மருந்துக் கடையில் கிடைக்கும். நவாச்சாரத்தைக் கையில் வைத்துக் கொஞ்சம் சுண்ணாம்பு போட்டுத் தேய்த்தாலும் இந்த ஆவி உண்டாகும்.
4. மயக்கம், களைப்பு, நரம்பு அதிர்ச்சி இவைகள் ஏற்பட்டால் சூடான காபி, பால் இவைகளைக் குடிக்க கொடுக்க வேண்டும்.
5. வலி பொறுக்கவே முடியாமல் போய் அதிர்ச்சி உண்டாகுமென்று தோன்றினால் கொட்டின வாயைச் சுற்றிலும் ஓர் ஊசிக் குத்து மூலம் சுரணைகொல்லி (Anaesthetic) மருந்து (கோக்கேனம் இனத்தைச் சேர்ந்த மருந்து) உட்செலுத்தலாம். வலி உடனே நின்று விடும். தேவையானால் இன்னும் ஒரு முறை ஊசி குத்தினால் போதுமானது.
தேனீக்கள் கொட்டினால் வலியோடு உடலில் தடிப்பும் ஏற்படும். தேனீ, பயத்தினால்தான் கொட்டுகிறது. கொட்டின ஈ இறந்து போகிறது. மலைகளிலும் காடுகளிலும் இருக்கும் தேனீக்கள் கொட்டுவதனால் மரணங்கூட ஏற்படக்கூடும். தேனீக் கொட்டுக்கும் தேள் கொட்டுக்குச் செய்யும் சிகிச்சை தான் செய்ய வேண்டும். தேனீ, கண்ட இடத்திலெல்லாம் கொட்டுமாதலால் கயிறு கட்டி விஷம் ஏறாமல் தடுக்க முடியாது. தேனீ கொட்டினால் அதன் சிறு முள் தோலில் தைத்துத் தங்கிவிடும். மெதுவாகப் பார்த்து எடுத்துவிட வேண்டும்.