Author Topic: ~ 30 வகை வடை-பாயசம்-கொழுக்கட்டை ~  (Read 2305 times)

Offline MysteRy

அடைப் பிரதமன்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், அடை - கால் கப் (கடைகளில் 'பாலடா’ என்று கிடைப்பது), சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: 
சுடுநீரில் அடை துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் குளிர்ந்த நீரில் கஞ்சிப் பசை போகுமளவுக்கு அலசவும். பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, அலசிய அடைத் துண்டுகளைப் போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி னால்... பிரதமன் (பாயசம்) தயார். இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.

Offline MysteRy

பருப்பு பாயசம்




தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப், வெல்லம் - 2 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: 
கடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியே வேக வைக்கவும். முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.  வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து, மசித்த கடலைப்பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, வேக வைத்த ஜவ்வரிசி, ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்த்து, கொதி வரும்போது சுக்குப்பொடி, தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி இறக்கினால்... பருப்பு பாயசம் ரெடி.

Offline MysteRy

சம்பா ரவை வெல்ல பாயசம்




தேவையானவை:
சம்பா ரவை - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.

செய்முறை: 
2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சம்பா ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு வறுத்து, 2 கப் நீர் விட்டு வேகவிடவும். ரவை வெந்ததும், வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும்.
விருப்பப்பட்டால்... தேங்காய்ப் பால், அல்லது வெறும் பால் சேர்க்கலாம்.

Offline MysteRy

மீல்மேக்கர் கீர்




தேவையானவை:
மீல்மேக்கர் உருண்டைகள் - 30, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: 
கொதிக்கும் நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பிழிந்து கொள்ளவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி துருவலாக எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீல்மேக்கர் துருவலை நன்கு வதக்கிக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மீல்மேக்கர் துருவலை சேர்த்து, குறைந்த தீயில் வேகவிடவும். 20 நிமிடம் கழித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது, முந்திரி, திராட்சை, ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். இதை குளிர வைத்தும் பரிமாறலாம்.

Offline MysteRy

சுரைக்காய் கீர்




தேவையானவை:
துருவிய சுரைக்காய் - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், (விருப்பப்பட்டால்) பாதாம் எசன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை: 
துருவிய சுரைக்காயை 10 நிமிடம் அப்படியே வைத்திருந்து, தண்ணீரை வடிக்கவும். பாலைக் காய்ச்சி, அதனுடன் சுரைக்காய்த் துருவலை சேர்த்து வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். விருப்பப்பட்டால், இறக்குவதற்கு முன் பாதாம் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

மஞ்சள் பூசணி கீர்




தேவையானவை:
துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, வெனிலா எசன்ஸ் அல்லது பன்னீர் - 2 சொட்டு.

செய்முறை: 
வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் துருவிய மஞ்சள் பூசணியை வதக்கிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அதில் பூசணித் துருவலை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். பாதியாக சுண்டியதும், முந்திரி, திராட்சை, வெனிலா எசன்ஸ் அல்லது பனீர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

பனீர் பாயசம்




தேவையானவை:
பனீர் - ஒரு கப், பால் - முக்கால் லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பாதாம் அல்லது பிஸ்தா பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை: 
பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாக வரும்போது, துருவிய பனீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, பாதாம் அல்லது பிஸ்தா பவுடர், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். எசன்ஸ் சேர்த்து இறக்கி... சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

Offline MysteRy

ஓட்ஸ் பாயசம்




தேவையானவை:
ஓட்ஸ் - அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை: 
அரை லிட்டர் பாலுடன் ஓட்ஸ் சேர்த்து வேகவிட்டு, எடுத்து வைக்கவும். மீதி அரை லிட்டர் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். பால் குறுகிவரும்போது, வேக வைத்த ஓட்ஸ், முந்திரி, திராட்சை சேர்க்கவும். பிறகு, எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ஓட்ஸை வேக வைத்து ஆறவிட்டு, பின்னர் சேர்ப்பதால், பாயசம் இறுகாமல் சிறிது தளர இருக்கும்.

Offline MysteRy

பார்லி  பருப்பு பாயசம்




தேவையானவை:
பார்லி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், வெல்லம் - ஒன்றரை கப்,  ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.

செய்முறை: 
பார்லியை 6-8 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குக்கரில் பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் சிறிது மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி... வெந்த பார்லி, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால்... காய்ச்சி, ஆற வைத்த ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம். அல்லது ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.

Offline MysteRy

மேக்ரோனி கீர்




தேவையானவை:
மேக்ரோனி - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு லிட்டர், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: 
மேக்ரோனியை கழுவி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது கழுவி வைத்துள்ள மேக்ரோனியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது... முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

Offline MysteRy

பட்டாணி கீர்




தேவையானவை:
பச்சைப் பட்டாணி - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - தேவைக்கேற்ப.

செய்முறை: 
பச்சைப் பட்டாணியை வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். அதை சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ள வும். மீதி நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அதில் மசித்த பட் டாணியை சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும். பாதியாக குறுகியதும் சர்க்கரை சேர்க்கவும். பிறகு, முந்திரி சேர்த்துக் கலக்கவும். இறக்கு வதற்கு முன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

Offline MysteRy

இளநீர் டிலைட்




தேவையானவை:
இளநீர் - 2, பால் - அரை லிட்டர், பிஸ்தா - சிறிதளவு, சர்க்கரை - அரை கப்.

செய்முறை: 
இளநீர், வழுக்கையை தனித்தனியாக எடுக்கவும். வழுக்கையை இள நீருடன் சேர்த்து அரைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சி இறக்கவும். பால் ஆறியதும், அரைத்து வைத்துள்ள வழுக்கையை சேர்த்துக் கலக்கவும். பிஸ்தாவை பொடியாக நறுக்கி அலங் கரிக்கவும். இதை குளிர வைத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

டிரைஃப்ரூட்ஸ்  சேமியா பாயசம்




தேவையானவை:
சேமியா - 100 கிராம் (மிகவும் மெல்லியதான சேமியா என்று கேட்டு வாங்கவும்), பால் -  ஒன்றரை லிட்டர், பாதாம், முந்திரி - தேவைக்கேற்ப, பேரீச்சம்பழம் - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப்.

செய்முறை: 
வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பாலை சூடாக்கி, பாதியாக வரும் வரை காய்ச்சவும். இதனுடன் வறுத்த சேமியாவை சேர்க்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து, சர்க்கரை சேர்க்கவும். நன்கு சுண்டி வரும்போது பாதாம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம் பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

மக்னா டிலைட்




தேவையானவை:
மக்னா (தாமரை விதை) - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 கப், பிஸ்தா - சிறிதளவு, பிஸ்தா எசன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை: 
தாமரை விதையைக் கழுவி, 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும். ஊற வைத்த தாமரை விதையை பிழிந்து பாலில் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சுண்டி வரும்போது, பிஸ்தா, பிஸ்தா எசன்ஸ் சேர்த்தால்... சுவையான மக்னா டிலைட் ரெடி.

Offline MysteRy

திடீர் பாயசம்




தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.

செய்முறை: 
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலில் பாதாம் பவுடர், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது... முந்திரி, திராட்சையை சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
அவசரமாக தயாரிக்க வேண்டிய நேரத்தில் கைகொடுக்கும் அசத்தலான பாயசம் இது.