Author Topic: 30 வகை பாயசம்!  (Read 2300 times)

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #15 on: September 06, 2013, 05:33:41 AM »
சேமியா, ரவை பாயசம்

தேவையானவை: ரவை - கால் கப் (அல்லது) ஜவ்வரிசி - கால் கப், சேமியா - அரை கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - அரை கப், பால் - அரை கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப, ஏலக்காய்தூள் - சிறிதளவு.

செய்முறை: ரவையை வறுத்து ஒன்றேகால் கப் தண்ணீரில் வேகவிடுங்கள். பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவேண்டும். வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்குங்கள். ரவைக்கு பதில் ஜவ்வரிசியையும் சேர்த்து இந்த பாயசத்தை செய்யலாம். ஆனால், ஜவ்வரிசி, சேமியா காம்பினேஷன் வழக்கமான ஒன்று என்பதால், ரவை சேர்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #16 on: September 06, 2013, 05:34:08 AM »
நட்ஸ் பாயசம்

தேவையானவை: முந்திரிப்பருப்பு - 50 கிராம், பாதாம்பருப்பு - 50 கிராம், பிஸ்தா பருப்பு - 50 கிராம், சர்க்கரை - ஒரு கப், நெய் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (வறுத்து போட) - சிறிதளவு, ஏலக்காய்தூள் - சிறிதளவு, பால் - இரண்டரை கப், குங்குமப்பூ - சிறிது.

செய்முறை: மூன்று வகை பருப்புகளையும் முதல் நாள் இரவே நீரில் மூழ்கும்படி ஊறவிடுங்கள். மறுநாள் நீரை வடித்துவிட்டு, பாதாம், பிஸ்தா பருப்புகளின் தோல் நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுங்கள். அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் முந்திரி, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப்போட்டு, ஏலத்தூளையும் போட்டு இறக்கும் முன், குங்குமப்பூ தூவி இறக்குங்கள். உடல் இளைத்தவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு இந்த பாயசத்தை அடிக்கடி செய்து கொடுக்கலாம்

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #17 on: September 06, 2013, 05:34:34 AM »
மைதா பிஸ்கெட் பாயசம்

தேவையானவை: மைதாமாவு - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பால் - 3 கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப. ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் - வாசனைக்கு சிறிது.

செய்முறை: மைதாமாவை பூரி செய்யும் பக்குவத்தில் பிசைந்து கொள்ளுங்கள். அந்த மாவை சிறிய பூரிகளாக தேய்த்து, அதில் டைமன் வடிவில் சிறிது சிறிதாக வெட்டி அதை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பாலை நன்கு கொதிக்கவைத்து, அதில் சர்க்கரையை போட்டு பால் நன்கு சுண்டக் காய்ந்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்து போடுங்கள். கடைசியில் மைதா பிஸ்கெட்களை லேசாக உடைத்து பாயசத்தில் போட்டு, சிறிது பச்சை கற்பூரமும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். மேலே சிறிது குங்குமப்பூவை விரும்பினால் தூவிக் கொள்ளலாம்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #18 on: September 06, 2013, 05:34:56 AM »
வெள்ளரி விதை பாயசம்

தேவையானவை: வெள்ளரி விதை (கடைகளில் கிடைக்கிறது) - அரை கப், பாதாம்பருப்பு - 20, பால் - 3 கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப, ஏலக்காய்தூள் - சிறிதளவு, நெய் - சிறிதளவு.

செய்முறை: வெள்ளரி விதையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பாதாம்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து எடுத்து, பிறகு இரண்டையும் மிக்ஸியில் பால் விட்டு மை போல அரைத்தெடுங்கள். அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவையுங்கள். நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததையும் போட்டு இறக்குங்கள். விருப்பப்பட்டால் குங்குமப்பூவை மேலே தூவிக்கொள்ளலாம். கோடையில் இப்பாயசத்தை அடிக்கடி செய்து பருகலாம். குளிர்ச்சி தரக்கூடியது. -

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #19 on: September 06, 2013, 05:35:17 AM »
நேந்திரம்பழ பாயசம்

தேவையானவை: நேந்திரம்பழம் - 3, அச்சு வெல்லம் - 10, தேங்காய் - 1, ஏலக்காய்தூள் - சிறிதளவு.

செய்முறை: நேந்திரம்பழங்களை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, பழம் மூழ்கும் அளவு நீர் விட்டு கொதிக்கவையுங்கள். அடிக்கடி கிளறிவிடுங்கள். சிவப்பு நிறம் வரும்வரை கிளற வேண்டும். தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அச்சு வெல்லத்தை நன்றாகப் பொடித்து, நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, பழக்கூழில் சேர்த்து கிளறுங்கள். முதலில் இரண்டாம் பாலை பாயசத்தில் விட்டு கிளறி, சிறிது பக்குவமாக வந்தபின் முதல் பாலையும் அதில் விட்டு நன்கு கிளறுங்கள். பொடித்த ஏலக்காயை அதில் போட்டு இறக்குங்கள். கேரளா ஸ்பெஷலான இந்த பாயசத்தை நீங்களும் செய்து சுவையுங்களேன்! சொக்கிப் போவீர்கள்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #20 on: September 06, 2013, 05:35:37 AM »
தினை அரிசி பாயசம்

தேவையானவை: தினை அரிசி - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 2 டம்ளர், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - 10, குங்குமப்பூ---, நெய், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு - தலா சிறிதளவு.

செய்முறை: தினை அரிசியை சுத்தம் செய்து, நன்கு வாசம் வர வறுத்து, பாலும், நீரும் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து, அந்த விழுதை பாலுடன் சேர்த்து சர்க்கரை போட்டு, வெந்த தினை அரிசியையும் நன்கு கரண்டியால் மசித்துச் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்தவுடன் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்து, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்குங்கள். இந்தப் பாயசம், பால் பாயசம் போலவே இருக்கும். ஒருமுறை சுவைத்தவர்கள், பிறகு விடவே மாட்டார்கள்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #21 on: September 06, 2013, 05:35:57 AM »
நூடுல்ஸ் பாயசம்

தேவையானவை: அரிசிமாவு - 2 கப், பால் - இரண்டரை கப், கண்டென்ஸ்டு மில்க் - அரை கப், சர்க்கரை - 2 கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய், ஏலக்-காய்தூள், குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: அரிசிமாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஓமப்பொடி அச்சில் வைத்து, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, கொதிக்கும் தண்ணீரில் பிழிந்துவிடுங்கள். அது வெந்தவுடன் மேலே மிதந்து வரும். பிறகு அடுத்த ஈடு பிழியுங்கள். இப்படியே எல்லா மாவையும் பிழிந்த பின் பாலையும், கண்டென்ஸ்டு மில்க்கையும் போட்டு கொதி வந்தவுடன் சர்க்கரையையும் போட்டு இறக்கவும். பிறகு பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூவையும் போட்டுக் கலந்து பரிமாறுங்கள். இப்போதெல்லாம் நூடுல்ஸ் விரும்பாத குழந்தைகளே கிடையாது. குழந்தைகளுக்கு இது ஒரு வித்தியாசமான பாயசமாக இருக்கும்

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #22 on: September 06, 2013, 05:36:22 AM »
பீட்ரூட் பாயசம்

தேவையானவை: பீட்ரூட் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், பால் - 4 கப், முந்திரிப்பருப்பு - சிறிதளவு, நெய் - சிறிதளவு, ஏலக்காய் எஸன்ஸ் - 2 சொட்டு.

செய்முறை: பீட்ரூட்டை நன்கு தோல் சீவி கழுவி, அதை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் வேக வையுங்கள். பின் அதை மிக்ஸியில் மைபோல் அரைத்து அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன் முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்துப் போட்டு எஸன்ஸ§ம் விட்டு இறக்கிவிடுங்கள். சிவப்பு நிற பீட்ரூட்டாக இருந்தால்தான் பாயசத்தின் கலரைப் பார்த்தவுடனே அனைவரையும் சுண்டி இழுக்கும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய, வைட்டமின் சத்து நிறைந்த பாயசம் இது.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #23 on: September 06, 2013, 05:36:45 AM »
முப்பருப்பு பாயசம்

தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், பாதாம்பருப்பு - கால் கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பையும் வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு பாதாம்பருப்பை ஊறவைத்து தோலுரித்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதை பாலுடன் சேர்த்து நன்கு கொதித்து வெந்தவுடன் பருப்பையும் சேர்த்து சர்க்கரையைப் போட்டு கொதிக்கவிடுங்கள். குங்குமப்பூவை கரைத்து அதில் விடுங்கள். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப்போட்டு பொடித்த ஏலத்தையும் போட்டு இறக்குங்கள். சுடச்சுட, புரதச்சத்து மிகுந்த பாயசம் ரெடி.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #24 on: September 06, 2013, 05:37:11 AM »
பனீர் பாயசம்

தேவையானவை: பனீர் - 200 கிராம், பால் - ஒரு லிட்டர், கண்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பனீரை துருவிக்கொள்ளுங்கள். பாலைக் காய்ச்சி, அதனுடன் சர்க்கரை, பனீர் துருவல் சேருங்கள். தீயைக் குறைத்துவைத்து, பாத்திரத்தில் இருக்கும் பால், முக்கால் பாகமாக (உதாரணமாக, 4 கப் அளவு என்றால் அது 3 கப்) ஆகும் வரை நன்கு கொதிக்கவிடுங்கள். அவ்வப்போது கிளறிவிடுங்கள். முக்கால் பாகமாக வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, கைவிடாமல் கிளறுங்கள் (இல்லையெனில், அடிப்பிடித்து, தீய்ந்துவிடும்). மேலும் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சீவிய பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூள் போட்டு இறக்குங்கள். சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #25 on: September 06, 2013, 05:37:31 AM »
அத்திப்பழ பாயசம்

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், தேன் - கால் கப், பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - அரை கப், பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு - கால் கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு கப் பாலில், பதப்படுத்திய அத்திப்பழமாக இருந்தால், அரை மணி நேரம் ஊறவையுங்கள். அரை கப் கொதிக்கும் தண்ணீரில் பாதாமை 5 நிமிஷம் ஊறவைத்து தோல் நீக்குங்கள். மீதி உள்ள பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். பாதாமையும் அத்திப்பழத்தையும் (அத்திப்பழம் ஊறவைத்த பாலுடன் சேர்த்து) மிக்ஸியில் அரைத்தெடுங்கள். அரைத்த கலவையை, அடுப்பில் உள்ள பாலுடன் சேர்த்துக் காய்ச்சுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் காய்ந்ததும் இறக்கி, சிறிது ஆறியதும், தேன், ஏலக்காய்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்துக் கலந்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். குறிப்பு: ஃப்ரெஷ் அத்திப்பழமாக இருந்தால், பாலுடன் சேர்த்து அப்படியே அரைக்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #26 on: September 06, 2013, 05:37:52 AM »
திடீர் பாயசம்

தேவையானவை: கெட்டியான பசும்பால் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ‘மாஸ்’ பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன், கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலில் சர்க்கரையை போட்டு, அது கரைந்ததும் அதோடு பாதாம் பவுடர், கண்டென்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் இறக்கிவைத்து முந்திரி, கிஸ்மிஸ், நெய்யில் வறுத்துப் போடுங்கள். குங்குமப்பூவை மேலே தூவுங்கள். திடீரென விருந்தினர் வந்துவிட்டால் பதட்டப்படாமல் செய்து அசத்தக்கூடிய ‘அவசர பாயசம்’ இது

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #27 on: September 06, 2013, 05:38:13 AM »
பூந்தி பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், பூந்தி (இனிப்பு, காரம், உப்பு இல்லாத வெறும் பூந்தி) - ஒரு கப், பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கண்டென்ஸ்டு மில்க் - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து, முக்கால் பாகம் ஆகும்வரை காய்ச்சுங்கள். அத்துடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஏலக்காய்தூள் சேருங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பூந்தியையும், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளையும் சேருங்கள். பிள்ளைகளுக்கு இந்த பாயசம் மிகவும் பிடிக்கும். குறிப்பு: பூந்தி செய்வதற்கு, கடலைமாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு, காயும் எண்ணெயில், பூந்திக் கரண்டியைப் பிடித்துக்கொண்டு அதன் மேல் மாவை ஊற்றி கரண்டியை மெதுவாக தட்டுங்கள். விழும் பூந்தியை மொறுமொறுப்பாக வேகவிட்டு, அரித்தெடுங்கள்.

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #28 on: September 06, 2013, 05:38:44 AM »
ஆப்பிள் பாயசம்

தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், இனிப்பு இல்லாத கோவா - கால் கப் (இனிப்பு உள்ள பால்கோவா என்றாலும் பரவாயில்லை), ஆப்பிள் - ஒன்றரை பழம், பச்சை நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள்ஸ்பூன், கண்டென்ஸ்டு மில்க் (விருப்பப்பட்டால்) - கால் கப், வெனிலா எஸன்ஸ் - ஒரு சொட்டு.

செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். நெய் சேர்த்து ஆப்பிள் துண்டுகளை லேசாக வதக்குங்கள். கோவாவை உதிர்த்துக்கொள்ளுங்-கள். பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் உதிர்த்த கோவா, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்-கள். ஃபுட் கலரையும், வதக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து, முக்கால் பாகமாக ஆகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள். வெகு சுவையாக இருக்கும் இந்தப் பாயசம்

Offline kanmani

Re: 30 வகை பாயசம்!
« Reply #29 on: September 06, 2013, 05:39:06 AM »
பச்சைப் பட்டாணி பாயசம்

தேவையானவை: பால் - 4, ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - ஒரு கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், பால்கோவா - கால் கப், பச்சை நிற ஃபுட் கலர் - சிறிதளவு, பாதாம்பருப்பு (மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - சிறிதளவு.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து, அது முக்கால் பாகமாக (அதாவது 3 கப் அளவுக்கு) ஆகும் வரை காய்ச்சுங்கள். கோவாவை உதிர்த்து, அதில் சேருங்கள். மற்றொரு பாத்திரத்தில் பட்டாணியை (உப்பு சேர்க்காமல்) வேகவையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, பட்டாணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, சிறுதீயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் இதை பாலுடன் சேருங்கள். அத்துடன் பாதாம், ஏலக்காய்தூள், பச்சை கலர் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.