Author Topic: 30 வகை ராகி சமையல்!  (Read 3142 times)

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #15 on: September 06, 2013, 04:54:31 AM »
ராகி பணியாரம்

தேவையானவை: ராகி மாவு, ரவை, சர்க்கரை, பால் - தலா ஒரு கப், சோடா உப்பு - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாலில் ராகி மாவு, ரவை, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும் (விரும்புகிறவர்கள் துருவிய தேங்காய் சேர்க்கலாம்). பிறகு அப்பக்குழியில் நல்லெண் ணெய் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #16 on: September 06, 2013, 04:54:55 AM »
சத்துமாவு உருண்டை

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய வெல்லம் - அரை கப்புக்கும் சற்று குறைவாக, தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முழு கேழ்வரகை 48 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒரு மூட்டையாக கட்டி வைத்தால் மறுநாள் காலை முளைவிட்டிருக்கும். (ஊறும்போது அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்). முளைவிட்ட ராகியை வறுத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு வாய் அகன்ற பேசினில் கொட்டி நடுவில் ஒரு குழி போட்டு, சுடுதண்ணீர், துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #17 on: September 06, 2013, 04:55:25 AM »
ராகி சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, துருவிய தேங்காய் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: முளைவிட்ட ராகியை இட்லி தட்டில் பரப்பி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் வேக வைத்த ராகி, தேங்காய் துருவல், கறிவேப்பிலையை சேர்த்து, கிளறி இறக்கவும். தேங்காய் துருவலை தவிர்க்க நினைப்பவர்கள் வறுத்த நிலக்-கடலையை கரகரப்பாக அரைத்தும் சேர்க்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #18 on: September 06, 2013, 04:55:54 AM »
ராகி சாலட்

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் - தேவைக்கேற்ப, மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை - சிறிதளவு, எலுமிச்சை சாறு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். எல்லா சத்துக்களும் நிறைந்த அற்புதமான டிஷ் இது.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #19 on: September 06, 2013, 04:56:20 AM »
ராகி பழ அப்பம்

தேவையானவை: ராகி மாவு, மைதா மாவு - தலா அரை கப், கனிந்த வாழைப்பழம் - 2, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். அதனுடன் மைதா மாவு, ராகி மாவு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கையால் கரைக்கவும். அப்பக்குழியில் எண்ணெய் ஊற்றி, அப்பமாக சுடவும். குறைந்த தீயில் செய்யவும். இல்லையெனில் கருகிவிடும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #20 on: September 06, 2013, 04:56:47 AM »
ராகி வடை

தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், ராகி மாவு - கால் கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பாதி தோல் மட்டும் போகும்படி கழுவவும். கழுவிய உளுந்தை கரகரப்பாக அரைத்து அதனுடன் ராகி மாவு, உடைத்த மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #21 on: September 06, 2013, 04:57:11 AM »
ராகி பக்கோடா

 தேவையானவை: ராகி மாவு, மஞ்சள் சோள மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - ஒரு அங்குல துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்-பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ராகி, சோள மாவுகளுடன் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #22 on: September 06, 2013, 04:57:37 AM »
ராகி கீர்

தேவையானவை: முழு கேழ்வரகு - அரை கப், தண்ணீர் - கால் கப், பால் - முக்கால் கப், பால் பவுடர் (அ) மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை: முழு கேழ்வரகை வெறும் கடாயில் வறுத்து, ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். இப்போது இதில் உடைத்த ராகியைப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பால் பவுடர், முந்திரி சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #23 on: September 06, 2013, 04:58:10 AM »
ராகி கூழ்

தேவையானவை: முழு கேழ்வரகு - 5 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முழு கேழ்வரகை முதல் நாள் சுத்தமாக கழுவி ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக அரைத்து 4 முறை பால் எடுக்கவும். எடுத்த பாலின் அளவைவிட மூன்று முதல் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி தனியே வைக்கவும். ஏழு (அ) எட்டு மணி நேரம் கழித்து மேலே தெளிந்திருக்கும் நீரை கொட்டி விடவும். அடியில் வண்டலாக படிந்திருக்கும் பாலை ஒரு துணியில் கட்டி தொங்க விடவும். அடுத்த நாள் துணியைப் பிரித்துப் பார்த்தால் ராகி விழுது படிந்திருக்கும். இதை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் தேவைப்படும்போது, தேவையான அளவு இந்த மாவை எடுத்து உப்பு, தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி கொடுக்கவும். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பருவத்தில் இதைக் கொடுக்கலாம்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #24 on: September 06, 2013, 04:58:39 AM »
ராகி மோர் கூழ்

தேவையானவை: ராகி மாவு - கால் கப், கடைந்த மோர் - கால் கப், தண்ணீர் - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, துருவிய கேரட் - 3 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் - சிறிதளவு.

செய்முறை: ராகி மாவை தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே தனியாக வைத்து விடவும். மறுநாள் காலை அதை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கூழாகக் காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் மோர், பச்சைமிளகாய், கேரட், சிறிய வெங்காயம், இஞ்சி சேர்த்து சாப்பிடவும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #25 on: September 06, 2013, 04:59:06 AM »
ராகி முறுக்கு

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், எள், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெ-யில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #26 on: September 06, 2013, 04:59:29 AM »
சத்துமாவு கஞ்சி

தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, முளைகட்டிய பயத்தம்-பருப்பு, முளைகட்டிய கோதுமை, முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பொட்டுக்கடலை, கோதுமை ரவை தலா -ஒரு கப், புழுங்கல் அரிசி, வேர்க்கடலை, முந்திரி - தலா அரை கப், எள் - கால் கப்.

செய்முறை: எல்லா பொருட்களையும் வெயிலில் காய வைத்து தனித் தனியாக வறுக்கவும். பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான வெல்லம், பால் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடிக்கவும். இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லத்துக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #27 on: September 06, 2013, 04:59:54 AM »
ராகி பூரி

தேவையானவை: ராகி மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்று சேர்த்து பூரி மாவுபோல பிசைந்து கனமான பூரிகளாக பொரித்து எடுக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #28 on: September 06, 2013, 05:00:20 AM »
ராகி போண்டா

தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. மேல் மாவுக்கு: ராகி மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை சிறு உருண்டைகளாக செய்து, கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மேல் மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

Offline kanmani

Re: 30 வகை ராகி சமையல்!
« Reply #29 on: September 06, 2013, 05:00:45 AM »
ராகி பிஸ்கெட்

தேவையானவை: ராகி மாவு - ஒன்றரை கப், சர்க்கரைத்தூள் - முக்கால் கப், டால்டா (அ) நெய் - அரை கப், முந்திரி - 10, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று முறை சலிக்கவும். இதனுடன் டால்டா (அ) நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கெட்டுகளாக தட்டவும். கடாயில் மணலை பரப்பி, பத்து நிமிடங்கள் சூடு செய்து, பிறகு ஒரு அலுமினிய தட்டில் பிஸ்கெட்டுகளை வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மூடி 'பேக்' செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்'-ல் செய்பவர்கள் 1600 சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் 'பேக்' செய்யவும்.