Author Topic: ~ 30 வகை இட்லி! ~  (Read 3615 times)

Offline MysteRy

~ 30 வகை இட்லி! ~
« on: August 12, 2013, 02:53:59 PM »
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

குறிப்பு:ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.




கீரை இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், இளம் முருங்கைக் கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #1 on: August 12, 2013, 02:56:40 PM »
வெஜிடபிள் இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #2 on: August 12, 2013, 02:59:05 PM »
கருப்பட்டி இட்லி



தேவையானவை:புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூளாக்கிய கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள். உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். நன்கு புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையான இட்லி இது.

குறிப்பு:மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #3 on: August 12, 2013, 03:01:45 PM »
தயிர் இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன், ஓமப்பொடி - 3 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க:தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.

தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #4 on: August 12, 2013, 03:04:52 PM »
பொடி இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #5 on: August 12, 2013, 03:06:56 PM »
தாளிச்ச இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

செய்முறை: இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லித் துண்டுகளை சேர்த்துக் கிளறுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #6 on: August 12, 2013, 03:09:36 PM »
தக்காளி இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க:இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #7 on: August 12, 2013, 03:12:37 PM »
கொத்துமல்லி இட்லி



தேவையானவை:இட்லி மாவு - 2 கப்.

அரைக்க:மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #8 on: August 12, 2013, 03:15:41 PM »
இட்லி மஞ்சூரியன்



தேவையானவை:இட்லிகள் - 10, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் ஸ்நாக்ஸ் என்பதால், மீந்துபோன இட்லிகளைக் கூட இப்படி மஞ்சூரியன்களாக செய்து கொடுக்கலாம். குஷியாகச் சாப்பிடுவார்கள்.

குறிப்பு:எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், எண்ணெயைக் குடித்துவிட்டு, மஞ்சூரியன் ‘சதசத’வென ஆகிவிடும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #9 on: August 12, 2013, 03:18:49 PM »
ஃப்ரைடு இட்லி



தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அத்துடன் சிட்டிகை உப்பு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு, இட்லிகள், இட்லிப் பொடி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளவே எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடக்கூடிய அசத்தலான ஸ்நாக்ஸ்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #10 on: August 12, 2013, 03:54:51 PM »
பெப்பர் இட்லி



தேவையானவை: இட்லி மாவு - 2 கப், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #11 on: August 12, 2013, 03:59:13 PM »
வெந்தயக்கீரை இட்லி



தேவையானவை: இட்லி மாவு - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிட்டிகை.

வறுத்துப் பொடிக்க:பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #12 on: August 12, 2013, 04:01:53 PM »
அரிசி ரவை இட்லி



தேவையானவை: புழுங்கலரிசி ரவை - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, கிரைண்டரில் போட்டு, தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள். அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன், உப்பும் சேர்த்துக் கலந்து, நன்கு கரைத்து வையுங்கள். மாவு நன்கு புளித்தவுடன் (8 மணி நேரம் புளிக்கவேண்டும்) இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள். ஹோட்டல் இட்லி தயாரிக்கப்படும் விதம் இதுதான்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #13 on: August 12, 2013, 04:05:17 PM »
காஞ்சிபுரம் இட்லி



தேவையானவை:புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண் ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.

தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு.

செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இட்லி! ~
« Reply #14 on: August 12, 2013, 04:07:58 PM »
வெந்தய இட்லி



தேவையானவை:புழுங்கலரிசி - 3 கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன் (குவித்து அளக்க வேண்டும்), ஆமணக்கு விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய ஊறியபிறகு, அரிசியை கிரைண்டரில் அரையுங்கள். பாதி அரைபடும்போதே, ஆமணக்கு விதைகளைத் தோலுரித்துச் சேருங்கள். நன்கு அரைபட்டதும் மாவை வழித்தெடுங்கள். ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைத்தெடுங்கள். பிறகு, அதை மாவில் கலந்து, உப்பு சேர்த்துக் கரைத்து, 6 முதல் 8 மணி நேரம் புளிக்கவிடுங்கள். புளித்த பின், இட்லித்தட்டில் ஊற்றி வேகவிடுங்கள்.