யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68 சதவீத கலப்பட பால் தடுக்க நடவடிக்கை
july, 03, 2013
புதுடெல்லி: பாலில் யூரியா உரம், சோப்பு பவுடர், பெயின்ட் கலந்து விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுவாமி அச்சுதானந்த் தீர்த் என்பவர் உட்பட பலர் கலப்பட பால் விற்பனையை தடுத்து நிறுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், யூரியா உரம், சோப்பு பவுடர், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளை பெயின்ட் கலந்து கலப்பட மற்றும் செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது. அந்த பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செயற்கை பால், கலப்பட பால், அதை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நாட்டில் விற்கப்படும் பாலில் 68 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை. இதன் விற்பனையை தடுக்க மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ் ணன், பி.சி.கோஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணை க்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:கலப்பட பால் விற்கப்படுவது மிகவும் முக்கியமான பிரச்னை. இது நாடு முழுவதும் நடக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். இந்த மாநிலங்களின் பதில் மனுக்களை பரிசீலித்த பின் நாடு முழுவதும் உள்ள எல்லா மாநிலங் களையும் இந்த வழக்கில் சேர்ப்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.