கிரிக்கெட் போட்டிகளின் போதும், ஹோலி, சுதந்திர தினம் போன்ற நாட்களிலும் முகத்திலும் உடலிலும் பெயின்ட்டால் படங்கள், சின்னங்களை வரைந்து கொள்கிறார்களே, இதனால் தோலுக்கு பாதிப்பு ஏற்படாதா?
பதில் சொல்கிறார் தோல்நோய் சிறப்பு மருத்துவர் ஜெயராமன்
அந்தக் காலத் திருவிழாக்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடியதைப் போல் இன்று இயற்கை வண்ணங்களை யாரும் பயன்படுத்துவதில்லை. இன்று கொண்டாட்டங்களுக்குப் பயன்படும் பெயின்ட், கலர் பவுடர் என எல்லாமே பாதரசம், காப்பர் சல்பேட், காரீயம் முதலான ரசாயனக் கலவைதான். இது உடலில் படும்போது, அவரவர் உடல் தன்மைக்கேற்ப அலர்ஜியை உண்டாக்கும். இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை அலர்ஜி, அரை மணி நேரத்திலேயே வேலையைக் காட்டி விடும்.
சருமத்தில் தடிப்புகள் ஏற்படுவது இதன் அறிகுறி. இரண்டாவது வகை அலர்ஜி என்பது வண்ணங்களில் உள்ள வேதிப்பொருள் தோலின் நுண்துளைகள் மூலம் உடலுக்குள் சென்று, பொறுமையாக, ஆனால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது. இதனால் ஒரு வாரம், பத்து நாள் கழித்து சருமம் புண்ணாகி, தோல் உரியலாம். அந்தப் புண் குணமாக மாதக்கணக்கில் கூட ஆகும்.
தோல் தாண்டி தலைமுடியில் இந்தக் கலர் பட்டிருந்தால், முடி உதிரலாம். முகத்தில் கலர்களைப் பூசும்போது, மூக்கு மற்றும் கண்ணுக்குள் போனாலும் பிரச்னைதான். காரணம், சில கலர்களில் கண்ணாடித் தூள் கலந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அவை கண்ணுக்குள் விழுந்தால், கண் எரிச்சல் உண்டாகி, சமயத்தில் பார்வையே பாதிக்கப்படலாம்.
அதே நேரம், தோல் அலர்ஜி எல்லாருக்குமே வரும் என்று பயப்பட வேண்டியதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை இது ஒன்றும் செய்யாது. நம் உடல்நிலை தெரிந்து, ‘இது கொஞ்ச நேர சந்தோஷம்’ என்பதையும் புரிந்து அளவாகப் பயன்படுத்தினால் ஓகே!