ஓட்ஸ் - முக்கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
கனிந்த வாழைப்பழம் - 2
சர்க்கரை - கால் கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தயிர் - கால் கப்
வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
மில்க் சாக்லெட் சிப்ஸ்/வால் நட்ஸ் - சிறிது (விரும்பினால்)
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். அவனை 350 டிகிரியில் முற்சூடு செய்யவும்.
மஃபின் ட்ரேயில் நாண்ஸ்டிக் ஸ்ப்ரே அடித்து அல்லது லைனர்ஸ் போட்டு தயாராக வைக்கவும். மிக்ஸியில் ஓட்ஸை பொடி செய்து, அதனுடன் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தோலுரித்த வாழைப்பழத்தை முள்கரண்டி அல்லது மேஷரால் மசித்து எண்ணெய், தயிர், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கலந்து வைக்கவும்.
வாழைப்பழக்கலவையுடன் கலந்து வைத்திருக்கும் மாவுக்கலவையைச் சேர்த்து, ஸ்பேட்சுலா கொண்டு அதிக அழுத்தம் கொடுக்காமல் கலந்துவிடவும். மிகவும் மென்மையாக ஃபோல்டிங் முறையில் கலப்பது அவசியம். இல்லையெனில் மஃபின்ஸ் மென்மையாக இல்லாமல் சற்று கடினமானதாகிவிட வாய்ப்பிருக்கிறது. விரும்பினால் சிறிது சாக்லெட் சிப்ஸ்/நட்ஸை சேர்த்து, ஃபோல்டிங் முறையில் கலந்துவிடவும். (அல்லது சாக்லெட் சிப்ஸை மஃபின்ஸின் மீது அலங்கரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்).
தயார் செய்த கலவையை மஃபின்ஸ் கப்களில் நிரப்பவும்.
பிறகு மஃபின் ட்ரேயை முற்சூடு செய்த அவனில் வைத்து, 25 முதல் 28 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். (அவரவர் உபயோகிக்கும் அவனைப் பொறுத்து சில நிமிடங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மாறுபடலாம்). முதல் 20 நிமிடங்கள் பேக் ஆனதும், ஒரு டூத் பிக்கை உள்ளே விட்டு சுத்தமாக வருகிறதா என்பதை பார்த்து, மஃபின்ஸ் முழுவதும் வெந்துவிட்டதா என உறுதி செய்து கொள்ளவும். இல்லையெனில் மேலும் ஓரிரு நிமிடங்கள் கூடுதலாக பேக் செய்து எடுக்கவும்.
பின்னர் மஃபின்ஸை எடுத்து, கம்பி ட்ரேயில் வைத்து ஆறவிடவும்.
சுவையான, எளிதாகச் செய்யக்கூடிய ஹெல்தி ஓட்ஸ் பனானா மஃபின்ஸ் ரெடி. வெகு விரைவில் செய்துவிடக்கூடிய இந்த மஃபின்ஸ் காலை நேர அல்லது மாலை நேர சிற்றுண்டியாக பரிமாற உகந்தது. (இதில் குறிப்பிட்டுள்ள அளவின்படி பொருட்களை எடுத்தால் 6 மஃபின்ஸ் கிடைக்கும்).