அம்மா!!!!
அனைத்து மொழிகளிலும் உயர்ந்த வார்த்தை...
பேச இயலாதவர்களும் சொல்ல துடிக்கும் வார்த்தை...
மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்களும் சொல்லும் வார்த்தை
இந்த ஒற்றை சொல்லை நீ கேட்க வேண்டி
எத்தனை வருடம் தவமிருந்தாய்
சுற்றத்தார் பலர் இருக்க,
கொண்டவன் துணை இருந்தும்
உனக்கென உன் உயிர் இல்லையென
ஆண்டவனை வேண்டி நீ அழுதும்
அவன் மனமிரங்கி வரவில்லை
நாட்கள் செல்லச் செல்ல
சுற்றத்தாரும் உன் உறவினரும்
நீ விதைத்த விதை மலடானதென
புறம் பேச
என் தந்தையோ தன் தாயை காயபடுத்த விரும்பாது
நீ பட்ட காயத்தை காணமல் போனாரே
விதைத்ததில் தோல்வியுற்ற
வேதனையில் உயிர் மாய்க்க
நால் முறை நீ முயன்றும்
தோற்றுப்போனாய்
வேறு வழியின்றி மீண்டும்
"எங்கன சுத்தியும் ரங்கன சேரு" என்பது போல்
மீண்டும் அவனடி சேர்ந்தாய்
உன் வேண்டுதல் வீண் போகாமலிருக்க
விதைத்த விதையிலிருந்து
செடியாய் நான் முளைத்தேன்
சுற்றத்தார் உனக்கிட்ட இழி சொல்லை நீக்கி
உன் பெண்மையை பூர்த்தி செய்தேன்
உன்னை பழித்தவர்கள் இட்ட விதை
பனை மரம் போல் உள்ளதம்மா-இன்று
ஆனாலும்
நாட்கடத்தி நீ இட்ட விதை
ஆலமரமாய் உன் முன்னே -நான்
இத்தனை நாட்கள் நீ பட்ட துயர்கள் போதும்
உழைத்து உழைத்து நீ
ஓடக தேய்ந்ததும் போதுமம்மா
இனியாது என் நிழலில் நீ உறங்க வேண்டும்
அம்மா என்றழைத்து
உன்னை பூர்த்தி செய்த எனக்கு
என் நிழலில் நீ இன்பமாய் ஓய்வெடுக்கும்
வரம் வேண்டும்