பாலக்காடு..! பரவசப்படுத்தும் அழகான சுற்றுலாத் தலம் !!!
இயற்கை அழகு பின்னிப் பிணைந்த பச்சைப்பசேல் மாவட்டம், கேரளாவின் பாலக்காடு மாவட்டம். கோயம்புத்தூரையொட்டி தமிழக- கேரள எல்லையில் அமையப் பெற்றுள்ள பாலக்காடு, கேரளாவின் தலைவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இருப்பதால், பாலக்காட்டின் தட்பவெப்ப நிலை பெரும்பாலும் ஜிலுஜிலு தான். பாலக்காட்டில் பார்த்து பரவசப்பட நிறைய இடங்கள் உள்ளன.
அட்டப்பாடி:
அலற வைக்கும் அடர்ந்த காடுகள், சலசலத்து ஓடும் ஆறுகள், மலைக்க வைக்கும் மலைக்குன்றுகள் என இயற்கை விரும்பிகளை சொக்க வைக்கும் வனப்பகுதிதான் அட்டப்பாடி வனப்பகுதி. பாலக்காடு அருகே மன்னார்காட்டில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. ஏராளமான ஆதிவாசி இனத்தவர்களும் அட்டப்பாடி வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மல்லேஸ்வரன் மலை உச்சியை பெரிய சிவலிங்கமாக கருதி இந்த மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இயற்கையுடன் இணைந்திருக்க விரும்புவோரும், ஆதிவாசி மக்களை அறிந்து வர விரும்புவோரும் அட்டப்பாடியை தேர்வு செய்யலாம்.
அமைதிப் பள்ளத்தாக்கு:
மன்னார்காட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைதிப் பள்ளத்தாக்கு