பரங்கிப்பழம் - ஒரு கீற்று
தேங்காய் - ஒன்று
மிளகாய் வற்றல் - 3
ஏலக்காய் - 3
அச்சு வெல்லம் - 3
அரிசி மாவு - ஒரு கப் + கால் கப்
சோம்பு தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு கப்
வேர்க்கடலை - கால் கப்
பரங்கிப்பழத்தை தோல் சீவி நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு கப் அரிசி மாவுடன் கால் கப் தேங்காய் துருவல், உப்பு, சோம்பு தூள் சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டையாக பிடித்து ஒரு சிறிய மூங்கில் தட்டில் வைக்கவும். அதை இட்லி பானையில் வைத்து 13 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
குக்கரில் ஊற வைத்த கடலைப்பருப்பு, நறுக்கிய பரங்கிக்காய், வேர்க்கடலை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாய் வற்றல், சோம்பு மற்றும் ஏலக்காய் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
மீதம் உள்ள தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி ஒன்றரை கப் அளவு பால் எடுத்துக் கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் சக்கையில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிகட்டிக் கொள்ளவும். கால் கப் அரிசி மாவுடன் கடைசியாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த காயை இறக்கி அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதிக தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். கரைந்ததும் காயுடன் வெல்லப் பாகை வடிகட்டி ஊற்றவும்.
3 நிமிடம் கழித்து கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
பிறகு கால் தேக்கரண்டி உப்பு போட்டு 2 நிமிடம் கழித்து வேக வைத்த கொழுக்கட்டையை போட்டு கிளறவும்.
அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி 2 நிமிடம் கழித்து பொடி செய்த மிளகாய், ஏலக்காய், சோம்பு பொடியை போட்டு நன்கு ஒன்றாக கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான பரங்கிப்பழம் பாயா தயார்.