Author Topic: 10 சுவையான மற்றும் எளிமையான கலவை சாதங்கள்!!!  (Read 1312 times)

Offline kanmani

பொதுவாக திங்கட்கிழமை வந்தாலே, அதிகாலையில் எழுந்து சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கும். என்ன சமைப்பதென்றே தெரியாது. அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்கள் பள்ளியில் மதிய வேளையில் சாப்பிட ஏற்றவாறு சமைக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளுக்கு இட்லி, தோசை என்று செய்து கொடுக்க முடியாது. அவ்வாறு செய்து கொடுத்தாலும், குழந்தைகள் சாப்பிடாமல் மாலையில் அப்படியே வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.

ஆகவே காலையில் இட்லி, தோசை என்று தினமும் செய்யாமல், அவ்வப்போது கலவை சாதம் எனப்படும் வெரைட்டி ரைஸ்களையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அது மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும், சுவையுடனும் இருக்கும். எனவே அத்தகையவர்களுக்காக, இங்கு ஒருசில எளிமையான முறையில் செய்யக்கூடிய கலவை சாத பட்டியலையும், அதன் செய்முறையையும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து அசத்துங்கள்.

Offline kanmani

காரமான... தக்காளி பூண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கவும். பின் அதனை இறக்கி, ஒரு குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் பூண்டு பேஸ்ட், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள்இ கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி, பின்னர் இறக்கவும்.

இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். அதுவும் இதனை ஏதேனும் மசாலா கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Offline kanmani

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப்
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
வர மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், சீரகம், வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், அதில் தண்ணீரை விட்டு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, உப்பை சரி பார்த்து மூடி போட்டு, 3 விசில் வந்ததும் இறக்கி விடவும். பின் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.

இப்போது அருமையான பருப்பு சாதம் ரெடி!!! இதனை நெய் விட்டு, ஊறுகாயுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Offline kanmani

பீட்ரூட் சாதம்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 2
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகதூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்கவும்.

 பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.

பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

இப்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி!!!

Offline kanmani

அவல் தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வேர்க்கடலைப் பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

 முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை தூவவும்.

இப்போது சூப்பரான அவல் தேங்காய் சாதம் ரெடி!!!



Offline kanmani

மலபார் ஸ்டைல்: நெய் சாதம்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
முந்திரி - 5
உலர் திராட்சை - 5
பாதாம் - 5
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியைக் கழுவி, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் போட்டு 2 நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே நெய்யில், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து, நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி, பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு 2 நிமிடம் வதக்கி, கேரட் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பிறகு விசில் போனதும் திறந்து, அதன் மேல் வறுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை போட்டு அலங்கரித்து பரிமாறவும். இப்போது மலபார் ஸ்டைல் நெய் சாதம் ரெடி!!


Offline kanmani

பூண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 20 பல் (லேசாக தட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 10
வேர்க்கடலை - 10
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம் மற்றும் மல்லி போன்றவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல், நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட வேண்டும்.

பிறகு அதில் சோம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தட்டி வைத்துள்ள பூண்டைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி, கழுவி வைத்திருக்கும் அரிசியைப் போட்டு கலந்து, 2 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பூண்டு சாதம் ரெடி!!! இதன் மேல் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை போட்டு அலங்கரித்து, பரிமாற வேண்டும். வேண்டுமெனில் இதனை குழம்பு அல்லது கிரேவியுடன் சாப்பிடலாம்.

Offline kanmani

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1 கப் (துருவியது)
பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச் (நறுக்கியது)
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பாசுமதி அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!




Offline kanmani

இட்லி பொடி சாதம்

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கப்
இட்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

 பின்பு அதனை சாதத்தில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, இட்லிப் பொடி மற்றும் உப்பு போட்டு மீண்டும் கிளற வேண்டும்.

இப்போது சுவையான இட்லிப் பொடி சாதம் ரெடி!!!



Offline kanmani

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்
தக்காளி - 5
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

 பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும்.

பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி வேண்டிய அளவு உப்பை சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும்.

பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி சாதம் ரெடி!!!


Offline kanmani

பைனாப்பிள் சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
அன்னாசிப்பழம் - 1 கப் (சிறிதாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) புதினா - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அன்னாசித் துண்டுகளை போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சியை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.

பின்பு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 4 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து, அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கி, சாதம் மற்றும் மிளகு தூள் போட்டு, நன்கு கிளறி 1 நிமிடம், எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி!!!