கோடையில் வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே தான், இதனை அதிக அளவில் சாப்பிட சொல்கின்றனர். இத்தகைய வெள்ளரிக்காயை பலவாறு சாப்பிடலாம். குறிப்பாக சாலட், ஜூஸ் போன்றவாறு சாப்பிடலாம். ஆனால் அந்த வெள்ளரிக்காயை சாண்ட்விச்சாகவும் செய்து சாப்பிடலாம்.
பொதுவாக வெஜிடேபிள் சாண்ட்விச்சிற்கு தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய் பயன்படுத்துவோம். ஆனால் வெள்ளரிக்காயை மட்டும் வைத்து, வித்தியாசமாக சாண்ட்விச் செய்து சாப்பிடலாம். இது ஒரு சிறந்த காலை உணவு அல்லது ஸ்நாக்ஸாக கூட இருக்கும். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 4-6
வெள்ளரிக்காய் - 1
சீஸ் துண்டுகள் - 4-6
பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் (துருவியது)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 சிட்டிகை
சாட் மசாலா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டின் முனைகளை சீவிக் கொண்டு, அதன் மேல் வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெள்ளரிக்காயை நைஸாக வெட்டிக் கொள்ளவும்.
பின் பிரட் துண்டின் மேல், சீஸ் துண்டை வைத்து, வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, அதன் மேல் உப்பு, மிளகு தூள் மற்றும் சாட் மசாலா தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரட் துண்டுகளை போட்டு, பிரட் சற்று பொன்னிறமாகவும், சீஸ் உருகும் வரையிலும் வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இது தான் வெள்ளரிக்காய் சீஸ் சாண்ட்விச்!!!