Author Topic: சிந்தி கொண்டைக்கடலை மசாலா  (Read 579 times)

Offline kanmani

கொண்டைக்கடலை பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். இந்த சன்னாவில் பொதுவாக அனைத்து வீட்டிலுமே, வெங்காயத்தை அரைத்து, மசாலாப் பொருட்களை சேர்த்து செய்வோம்.

ஆனால் இந்த மசாலாவில் கொத்தமல்லி டேஸ்ட் வரும் வகையில், அதனை சற்று அதிகமாக போட்டு, வித்தியாசமான சுவையில் செய்தால், நன்றாக இருக்கும். அதற்கு சிந்தி கொண்டைக்கடலை மசாலா என்று பெயர். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கட்டு
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை 2 கப் நீரில், 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி, குக்கரில் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து, அத்துடன், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு, 2-3 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கிய வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

 பின்பு மல்லி தூள், மஞ்சள் தூள், மாங்காய் தூள் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான சிந்தி கொண்டைக்கடலை மசாலா ரெடி!!!

இது பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.