என்னென்ன தேவை ?
கருணைக்கிழங்கு - 300 கிராம்
வெங்காயம் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
தக்காளி - 2
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 100 மில்லி
எப்படி செய்வது?
கருணைக்கிழங்கை நன்றாக கழுவி சதுரவடிவில் சிறிது, சிறிதாக வெட்டி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி தோசைக்கல்லில் தனித்தனியாக வைத்து வேகவையுங்கள்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கத்தை கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் பொன்னிற பதத்துக்கு வந்ததும், கருணைக்கிழங்கைப் போட்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டைப் போட்டு சிறிதுநேரம் வேகவையுங்கள். தண்ணீர் ஊற்றக்கூடாது.
தக்காளி நீர்ப்பதத்தில் வேகவேண்டும். கிளறும்போது, கருணைக்கிழங்கு உடையாமல் கிளறவேண்டும். வெந்து வாசம் பரவியதும், கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் போட்டு இறக்குங்கள்.
கந்தகட்ட வேப்புடு ரெடி.