Author Topic: விக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்?  (Read 738 times)

Offline kanmani

  • FTC Team
  • Classic Member
  • ***
  • Posts: 12428
  • Karma: +1/-0
  • Gender: Female
எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனை நிறுவனர், லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிகிச்சை  நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

மது குடிப்பவர்கள் அதிக போதையால் சாப்பிடாமல் தூங்கிவிடுகிறார்கள். இதனால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் கேடு என்ன?

மது குடித்துவிட்டு சாப்பிடாமலிருப்பதால் வயிற்றில் புண் உண்டாகும். அதுவே தொடருமானால் கேன்சர் வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்வதால்  ரத்த வாந்தி ஏற்படலாம். கணையம், ஈரல் முதலானவை பாதிக்கப்படலாம். சில சமயங்களில் மூச்சுத்திணறல் வரலாம்.

அடி வயிற்றில் இடது புறமும், வலது புறமும் அவ்வப்போது வலிக்கிறது. இது எதனால் ஏற்படுகிது?

வலது புறத்தில் வலி இருந்தால் அப்பண்டிக்ஸ் எனப்படும் குடல் வால்வு பிரச்னையாக இருக்கலாம். இரண்டு புறத்திலும் வலி இருந்தால் குடலில்  கிருமிதொற்று இருக்கலாம். அதுவே தொடர்ந்து வலி இருந்து வாந்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை  அணுகுவது நல்லது.

நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் துவக்க நிலையில் நீச்சல் குள நீரை குடித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நீச்சல் குளத்தில் சிலர் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிடுகிறார்கள். எனவே, அந்த நீர் மாசுபட்டுவிடுகிறது. அதை பருகும்போது கிருமி தொற்று  ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எண்டோஸ்கோபி பரிசோதனையை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டுமா?

மேற்கொள்ளலாம். வயிற்றில் ஏதேனும் பிரச்னையிருப்பின் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம். உள்ளே உள்ள  பிரச்னைகளை ஸ்கேன் மூலமாக 90 சதவீதம் பார்க்கலாம். ஆனால் எண்டோஸ்கோபி மூலமாக நேரடியாக பார்க்க முடியும்.

சிலர் 4 அல்லது 5 நாட்களுக்கு மலம் கழிக்காமல் உள்ளனர். இதற்கு காரணம் கண்டறிய கொலனோஸ்கோபி உதவுமா?

சில சமயம் மலக்குடல் பகுதியில் சுருக்கம் அல்லது மூலநோயிருந்தால் இது போன்ற பிரச்னை ஏற்படும். 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் 6  மாதங்களாக மலம் கழிக்கவில்லை. எனவே அவர் பயந்து திரவ உணவை மட்டும் எடுத்துக்கொண்டார். அவருக்கு கொலனோஸ்கோபி பரிசோதனை  செய்து பார்த்ததில் மலம் இருகி கல்போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து எடுத்தோம். இப்பொழுது  நன்றாக உணவு உண்கிறார். எந்த பிரச்னையுமில்லாமல் மலம் கழிக்கிறார். எனவே, நார்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர்  அதிகமாக பருகவேண்டும்.

கேன்சர் நோயாளிகளுக்கு வாய் வழியாக உணவு கொடுக்க முடியாமல், நீர் உணவை புனல் மூலம் தொண்டைக்குழியில் ஓட்டை போட்டு  கொடுக்கிறார்களே? உமிழ்நீர் இல்லாமல் செல்லும் உணவு செரிக்குமா? வேறு பிரச்னை வருமா?

தொண்டையிலிருந்து அல்ல. வயிற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலமாக அல்லது மூக்கு வழியாக உயிர் வாழ்வதற்குத் தேவையான சப்ளிமெண்ட்  உணவு அளிக்கப்படும். அதனால் பிரச்னை ஒன்றுமில்லை.

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருகிறது. காரணம் என்ன?

உணவுக்குழாயில் புண் இருக்கலாம் அல்லது எதுக்கலிச்சலாக இருக்கலாம். தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.

சாப்பிடும்போது திடீரென்று புரையேறுகிறது. மூச்சுக்குழாயில் உணவு துகள் செல்வதாலா? வேறு காரணமா? மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால்  எண்டோஸ்கோபி மூலம் எடுக்க முடியுமா?

சாப்பிடும்பொழுது உணவுக்குழாய் வழியாக உணவு செல்லும். அந்த நேரத்தில் பேசும்போது மூச்சுக்குழலில் உணவு செல்ல நேரிடும். அப்பொழுதுதான்  புரையேறுகிறது. ஆனால் உணவுத்துகள் தானாகவே வெளி வந்துவிடும். சில சமயங்களில் உணவுத்துகள் சிக்க நேர்ந்தால் உயிருக்கே ஆபத்தாக  அமைந்துவிடுவதுண்டு. எனவே, சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.