குட்டீஸ் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சுவைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. சம்மர் தொடங்கி விட்டாலே மாம்பழம் சீசன் ஆரம்பித்து விடும். தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான மாம்பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து சில தகவல்கள் இதோ உங்களுக்காக:
இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் விளைகின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி, மதனபள்ளி, விஜயவாடா போன்ற பகுதிகளில் இருந்து பங்கனபள்ளி, செந்தூரா, இமாயத் போன்ற வகை மாம்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சேலத்தில் இருந்து கோவா, பீத்தர் வகை பழங்களும், கிருஷ்ணகிரி, தேனி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பங்கனபள்ளி, செந்தூரா வகை பழங்களும் வருகிறது.
திருத்தணி, திருவள்ளூர் பகுதியிலிருந்து ருமானி, பங்கனபள்ளி, மல்கோவா பழங்கள் இறக்குமதி ஆகின்றன.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லாரிகளில் மாம்பழங்கள் வருகின்றன. கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் முதல் அனைத்து வகை மாம்பழ வரத்தும் அதிகரிக்கும். ரொம்பவும் டேஸ்டான மாம்பழங்கள் ஜூனில்தான் வருமாம்.
மாம்பழங்களில் பீத்தர், மல்கோவா, அல்போன்சா வகை பழங்கள் அதிக இனிப்பு தன்மை வாய்ந்தது.
பயன்படுத்தும் முறை:
மாம்பழங்களை வெறும் தரையில் வைக்க கூடாது. ஏதாவது ஒரு தாளை விரித்து அதன்மேல் வைக்க வேண்டும்.
வெட்டப்பட்ட மாம்பழ துண்டுகளை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.
1 கப் மாம்பழத்தில் 100 கலோரி சத்து உள்ளது.
மாம்பழத்தை 15 முதல் 20 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து, அதன்பின் சாப்பிட்டால் உடலில் உள்ள உஷ்ணம் குறையும்.
உஷார்...
கார்பைடு கல் மூலமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
கால்சியம் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மேல் கரும்புள்ளிகள் தெரியும்.
பழத்தை இரண்டாக வெட்டினால் தோலை ஒட்டியிருக்கும் இடம் மஞ்சள் நிறத்திலும், மேற்பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.
இதுபோன்ற பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அல்சர், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும். கேன்சர் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தரமான மாம்பழங்களை பரிசோதித்து வாங்கி சாப்பிடுங்க...