Author Topic: கூந்தலுக்கு சிறப்பான ஆயில் மசாஜ் செய்வது எப்படி?  (Read 530 times)

Offline kanmani

தலைமுடி மிகவும் வறண்டு, பளபளப்பின்றி, அதிக சிக்குடன் இருப்பதை யாருமே விரும்புவதில்லை. இதனை மாற்றவும், தடுக்கவும் நமது சமையலறையிலேயே அதற்கான மருத்துவம் உள்ளது. அதாவது சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தான், தலைமுடியின் சிறந்த இயற்கை பராமரிப்புப் பொருளாக அமைவதோடு, அவை முடிகளில் நன்கு ஊடுருவி, நல்ல பளபளப்பைத் தந்து முடி உடைதலையும் தடுக்கிறது. இத்துடன் மூலிகை அல்லது மலர்கள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய் வகைகளையும் கலந்து சூடேற்றி தடவும் பொழுது முடிக்கு நல்ல மினுமினுப்பைத் தருகிறது.


ஆயில் மசாஜ் செய்வதற்கான முறைகள்:


1. ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொண்டு சம அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் (Grape Seed Oil) மூன்றையும் கலந்து 10 விநாடிகள், மைக்ரோவேவ் அடுப்பில் சூடு செய்யவும் அல்லது சூடான வெந்நீர் பாத்திரத்தின் நடுவில் கிண்ணத்தை சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பின்னர் இத்துடன் ரோஸ்மேரி, லாவெண்டர் ஆகிய இரண்டு வகை நறுமண எண்ணெய் வகைகளை 3 துளிகள் கலந்து, அத்துடன் சேஜ் எண்ணெய் (Sage oil) எனப்படும் நறுமண எண்ணெயையும் சில துளிகள் சேர்க்கவும். பிறகு ஒரு மரக்கரண்டியால் எண்ணெய் கலவையை நன்கு கலக்கி விடவும்.


2. தலைமுடியை நான்கு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டப்படி கலக்கிய எண்ணெயை விரல் பொறுக்கும் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பின்பு இந்த எண்ணெயை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, தலை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தேய்க்கவும். இது போல் நான்கு பாகங்களிலும் தேய்க்கவும்.

3. இப்பொழுது பிளாஸ்டிக் உறையால் செய்யப்பட்ட தலைப் பராமரிப்பு கவசத்தால் (Plastic Conditioning Cap) தலைமுடியை நன்கு மூடவும். சூட்டைத் தரும் தலைக் கவசம் ( Heating Cap) அல்லது பானட் உலர்த்தியின் ( Bonnet Dryer) கீழ் 10-15 நிமிடங்கள் உட்காரவும். இச்சாதனங்கள் இல்லையென்றால், வெந்நீரில் நனைக்கப்பட்ட துண்டை, தலைமுடியை சுற்றி கட்டி, அதன் மேல் மற்றொரு வெந்நீரில் நனைத்த துண்டால் சுற்றி, 10-15 நிமிடங்கள் கட்டி வைக்கவும். பிறகு, வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு வகைகளைத் தேய்த்துக் குளிக்கவும்.

குறிப்பு மற்றும் எச்சரிக்கை:


* அதிக நேரம் பராமரிக்க விரும்புபவர்கள், முதல் நாள் இரவே இந்த கலவை எண்ணெயை தலையில் தடவி நன்கு ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும்.

* எந்த ஒரு எண்ணெயையும் பயன்படுத்தும் முன்னும், முழங்கையின் முன்பகுதி (புறங்கை) அல்லது கழுத்துப் பகுதியில் சிறிது எண்ணெயைத் தடவி, சில மணி நேரம் கழித்து ஒவ்வாமை அறிகுறி ஏதேனும் ஏற்படுகிறதா எனப் பரிசோதித்துவிட்டு, பின் கலவையைத் தலைமுடிக்குப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.