//கருநீல வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...//
அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும் விண்மீன்கள் தனிமையின் குறியீடுகளாகி, அழுத்தமாய் தனிமையின் வெற்றுத்தன்மையை பதிவு செய்திருக்கிறது
//மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...//
காம பிரம்மன் அழகிய சொல்லாடல்
காமபிரான் என்று கூட சொல்லலாம் இல்லையா அவனை
நிலவற்ற வானுக்கான படிபம் சிறப்பு
//தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...//
இந்த பத்தி சற்று நிதானமாய் கடக்க வேண்டியிருக்கிறது
தேக துகள், பாக தானைகள்
சடக்கென கவனத்தை ஈர்க்கிறது
தேகத் துகள் = செல்கள்
பாகத்தானை = பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் ஒரு படை உண்மைதான்
தென்றலின் தொடுகையும் நாணமும் மூடும் இமையும் கண்முன் விரிகிறது
//வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்//
வான் காணா பிறை, தான் காண விரல் கீறல் மிக அற்புதமான படிமம்
மோக மிதம் மிஞ்ச நிலைகுலைவையும், அலையும் மார்ப்பை குடையென வர்ணித்தமையும் சிறப்பு
//எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இனிமை//
மேகம் கவிதை இந்த வரி எனக்கொரு படிமமாகவே தெரிகிறது
மேகம் நாணத்தை படிமமாய் காண்கிறேன்
இருளில் மேகம் தெரியாது, மேகம் அழகு நிலா வழியும் போது, நிலா முகம் மறையும் மேகம் நாணம்
நாணம் கவிதைத்தான், பெண்களுக்கான உடல்மொழியே கவிதைத்தானே
//இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...//
ஒரு நிலவிற்கான காத்திருப்பாகவும், ஒரு நிலவனுக்கான காத்திருப்பாகவும் இரு தொனியில் கவிதை முடிகிறது
இரு தொனி பிடிபட்டப் போது மீண்டும் கவிதையை முதலிலிருந்து ஒருமுறை வாசிக்க தோன்றியது
மிக சிறப்பான கவிதைங்க பாராட்டுக்கள்