Author Topic: ~ "மழைக் கவிதைகள்" ~  (Read 2349 times)

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #15 on: September 20, 2013, 08:27:09 PM »



நனைத்தாலும் மழை நண்பன் தான்.

மாலை நேரம்.
திடீர் மழை.

வருவோர் போவோர்
சாலையோர நிழற்குடையில்
ஒதுங்கினர்..

சாலையும் மழையும்
கலவிக் கொண்டிருந்தன.

நனைந்து போன
படுக்கையையும் தலையணையும்
பத்திரப்படுத்தினார்
சாலைவாசித் தந்தை.

மகள் மட்டும்
கட்டுப்பாடுகளை மீறி ...

தன் இருப்பிடத்தை
நனைத்து விட்ட
மழையின் மேல்
எந்த கோபமும் இல்லாமல்
துள்ளி விளையாடினாள் .

நனைத்தாலும் மழை
நண்பன் தான்.

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #16 on: September 20, 2013, 08:28:08 PM »



எல்லா
மழையும்
உன் உதட்டில்
பட்டு
இன்னும்
கொஞ்சம்
சில்லிட்டுச்
சிரிக்கிறது

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #17 on: September 20, 2013, 08:29:10 PM »



மேகம் பெற்றெடுத்த
மழைக் குழந்தையை
மடியிலிட்டுக் கொஞ்சுகிறாள்
பூமிப் பாட்டி...

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #18 on: September 20, 2013, 08:30:26 PM »



மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
என் வீட்டுத் தேநீர்க்கோப்பையின்
சுவை கூட்டிப் போகிறது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
வண்டி கழுவும்
என் சோம்பேறித்தனங்களுக்கு
வடிகாலாகின்றது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
அண்டை வீட்டார்களை
அறிமுகப்படுத்துகின்றது

மழை
ஒவ்வொருமுறை
பெய்யும் பொழுதும்
என் பேனாவில்
கொஞ்சம் மையூட்டுகிறது
நான் அதில்
கொஞ்சம் பொய்யூட்டுகிறேன்

மழை
ஒவ்வொருமுறையும்
எதிர்பாராத தருணங்களில்
எதிர்பட்டு
எனை நனைத்துச் செல்கிறது
அவளைப் போலவே !

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #19 on: September 20, 2013, 08:32:07 PM »



மழை அதிகம் பெய்வதை கண்டு
மலைத்து போய் விடமாட்டோம் .
முடங்கி போய் விட, கோழையல்ல.
முத்திரை பதிக்கும் சித்திரம் நாங்கள் ...

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #20 on: September 20, 2013, 08:33:22 PM »



இலைத் துளி நீராய்
நீ
பிரியத்தான் போகிறாய்
தெரிகிறது
இன்னும் சில நொடிகளாவது
உன்னைத் தாங்கி கொள்ளமாட்டேனா?

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #21 on: September 20, 2013, 08:35:09 PM »



தூறலின் பின்...
****************
தூறலின் பின் மென் அமைதி...
தூய்மைச் சிலிர்ப்பில்
மலர்களும் மரங்களும்...
நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட
தலைக் குளித்த தேவதைகளாய்...

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #22 on: September 20, 2013, 08:36:35 PM »



முதுவேனிற்காலத்தின் பிற்பகல்..

உலைநீரின் வெம்மையை விஞ்சியபடியே
தடவிச்செல்கிறது கனற்காற்று..

காற்றினுங்கடுகிப்பறந்தபடியே
அலுவலகம்நோக்கிய பயணம்..

மேலே பறந்துசென்ற பறவையின் நிழலும்
சூடாய் தரையில் விழுகிறது..

திடுமென சூரைக்காற்று..!

சூரியனின் கண்ணைக்கட்டிய
கார்மேகக்கூட்டங்கள்
கைகொட்டியபடியே
காற்றுடன் விளையாடியதால்
ஆனந்தக்கண்ணீரை சொரிகின்றன..

ஒருதுளி இருதுளியாகி
வானிலிருந்து தரைநோக்கிய வெள்ளமாய்
ஆனந்தமழை..

மழை எவ்வளவு அழகோ
அதைவிட அழகு
மழையில் நனைபவர்கள்..

சுடிதார்ப்பூக்கள்
சேலைச்சிற்பங்கள் அழகோ அழகு..!

அவர்களின் இமையிடுக்கில்
வைரத்துளியாய் மழைத்துளிகள்
அதனினும் அழகு..!

மழைத்துளி முத்தமிட்டவாறே வீழ்கிறது..
பறவைகளை..
புகைகக்கும் ஊர்திகளை..
நெடிய கட்டிடத்தை..
குதித்தோடும் விலங்குகளை..
கையசைக்கும் சாலையோர செடிகளை..
கருஞ்சாலையை..

விழும்போதே சிரித்துக்கொண்டே விழும்
மழைத்துளிகள்
மறவாமல் வரிசையில் செல்கின்றன
நீர்க்குமிழிகளாய்...


நனைந்த யாருமே
மழையை திட்டவில்லையெனில்
நாளையும் வருவாள்
நம்மை நனைக்க..!

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #23 on: September 20, 2013, 08:38:09 PM »



நினைவுக்கொம்பு நீட்டி
காதல் நத்தை ஒன்று
உள்ளூர ஊர்ந்து கொண்டுதான்
இருக்கிறது மழைக்காலமெங்கும்.

Offline MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #24 on: September 20, 2013, 08:39:16 PM »



வானில் கலவரம் இடியுடன் மின்னல்...

மேகத்தின் ஊடல் அழகிய மழை...

மழைத்துளியின் கூடல் மண்ணின் ஈரம்...

காற்றின் புனிதம் இதமான தென்றல்...

மழையால் உயிர்த்தெழுந்தது மண்புழு எனும் ஜீவன்...

மழைத்துளி மண்ணோடு மீட்டிய இசை...

குளிர்ந்த மழை நீரில் கால்பதித்து நனைய வந்தேன் குழந்தைபோல.