காஷ்மீரி காராமணி மசாலா மிகவும் சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு மசாலா. பொதுவாக காராமணியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை காராமணி மற்றொன்று சிவப்பு காராமணி. இப்போது இந்த மசாலாவில் பயன்படுத்தியிருப்பது சிவப்பு காராமணி. பெரும்பாலும் காஷ்மீரி உணவுகள் காரத்தில் மிகவும் குறைவாக இருக்கும்.
ஏனெனில் காரம் அதிகம் இருந்தால், சுவை குறைந்துவிடும் என்பதாலேயே. மேலும் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல், சற்று வித்தியாசமான முறையில் மசாலா செய்யப் போகிறோம். '
சரி, இப்போது அந்த காஷ்மீரி காராமணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்
காஷ்மீரி காராமணி - 2 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது)
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும், தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய இஞ்சி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின் வேக வைத்துள்ள காராமணியைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மீண்டும் 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான காஷ்மீரி காராமணி மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, பின் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.